செய்திகள்
கோப்பு படம்

தஞ்சையில் ஹெல்மெட் அணியாமல் வந்த “போதை” வாலிபருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

Published On 2019-09-19 10:01 GMT   |   Update On 2019-09-19 10:01 GMT
தஞ்சையில் ஹெல்மெட் அணியாமலும், மது போதையிலும் மோட்டார் சைக்கிள் ஓட்டிவந்த வாலிபருக்கு போலீசார் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
தஞ்சாவூர்:

தஞ்சையில் ஹெல்மெட் அணியாமலும், மது போதையிலும் மோட்டார் சைக்கிள் ஓட்டிவந்த வாலிபருக்கு போலீசார் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தனர். தஞ்சையில் முதன் முறையாக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது தஞ்சை வாகன ஓட்டிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசு இருசக்கர வாகனம் ஓட்டுபவர் பின்னால் அமர்ந்திருப்ப வரும் கட்டாய ஹெல்மெட் அணிய வேண்டும் என தெரிவித்துள்ளது. இதுகுறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் மற்றும் மதுஅருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் முந்திய அபராத தொகையை விட தற்போது அபராதத் தொகை அதிகரித்துள்ளது. இதுகுறித்து ஆங்காங்கே போலீசாரால் அறிவிப்பு பலகை மற்றும் விழிப்புணர்வு காணொளிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

மேலும் தஞ்சையில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி கல்லூரி வளாகம், பஸ் நிலையங்கள், பைபாஸ் சாலைகளில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு அபராத தொகை வசூலித்து வருகின்றனர்.

தமிழகத்தில் புதிய வாகன சட்டம் அமுல்படுத்துவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதால் தற்போது பழைய நடைமுறையில் ரூ. 100 முதல் ரூ.500 வரை வசூல் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று தஞ்சை பழைய பஸ்நிலையம் பின்புறம் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக ஹெல்மெட் அணியாமல் வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்த போது அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த தஞ்சை சேவியர் நகரை சேர்ந்த அரவிந்த் (வயது 36) என்ற வாலிபர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரது வாகனத்தை பறிமுதல் செய்து தஞ்சை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதனை விசாரணை செய்த நீதிபதி மதுபோதையில் வாகனம் ஓட்டிவந்த அரவிந்திற்கு போக்குவரத்து போலீசார் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கும்படி உத்தரவிட்டார்.

தஞ்சையில் மது போதையில் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டிவந்த வாலிபருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்திருப்பது தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News