செய்திகள்
தனியார் பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்.

தாராபுரம் அருகே தனியார் பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

Published On 2019-09-19 05:45 GMT   |   Update On 2019-09-19 05:45 GMT
தாராபுரம் அருகே இன்று காலை தனியார் பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து பழனி செல்லும் வழியில் மங்கலாம் பாளையம் என்ற ஊர் உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் புறநகர் பஸ்கள் நிற்காமல் சென்றது. இது குறித்து கிராம மக்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஐகோர்ட்டு மங்கலாம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும் என உத்தரவிட்டது.

ஆனாலும் பழனி செல்லும் தனியார் மற்றும் அரசு பஸ்கள் மங்கலாம் பாளையத்தில் நிற்காமல் சென்று வந்தது.

இந்த நிலையில் இன்று அதிகாலை 5.45 மணிக்கு மங்கலாம் பாளையத்தை சேர்ந்த 3 பேர் தாராபுரம் பஸ் நிலையத்தில் ஈரோட்டில் இருந்து பழனி செல்லும் தனியார் பஸ்சில் ஏறினார்கள். அவர்கள் மங்கலாம் பாளையத்திற்கு டிக்கெட் எடுத்தனர்.

ஆனால் பஸ் அங்கு நிறுத்தப்படவில்லை. சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சென்று மணக்கடவு என்ற ஊரில் நிறுத்தப்பட்டது. அங்கு இறங்கி 3 பேரும் தங்கள் ஊருக்கு நடந்து வந்தனர். இது குறித்து பொதுமக்களிடம் கூறினார்கள். அவர்கள் ஆத்திரம் அடைந்தனர். இந்த நிலையில் பழனிக்கு சென்ற தனியார் பஸ் காலை 7.45 மணியளவில் மீண்டும் மங்கலாம் பாளையம் வந்தது.

இதனை கிராம மக்கள் சிறை பிடித்தனர். பஸ்சை நிறுத்தாமல் சென்ற டிரைவர், கண்டக்டரை தாக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் பஸ் டிரைவர், கண்டக்டரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இனி மங்கலாம் பாளையத்தில் பஸ்சை நிறுத்தி செல்வோம் என டிரைவர், கண்டக்டர் உறுதி அளித்தனர். இதனை பொது மக்களும் ஏற்றுக்கொண்டனர். இதனை தொடர்ந்து தனியார் பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

இந்த சம்பவம் காரணமாக தாராபுரம் - பழனி சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன் தாராபுரத்தில் இருந்து மங்கலாம் பாளையத்திற்கு பஸ் ஏறிய ஆசிரியை மற்றும் 4 மாணவிகளை அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் மங்கலாம் பாளையத்தில் இறக்காமல் பழனி அழைத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்டு செய்யப்பட்டு வேறு பணிமனைக்கு மாற்றப்பட்ட சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News