செய்திகள்
கமல்ஹாசன்

மாணவர்கள் யாரேனும் படிப்பை பாதியில் நிறுத்தினால் அதற்கு முழு காரணம் அரசுதான்: கமல்ஹாசன்

Published On 2019-09-18 13:47 GMT   |   Update On 2019-09-18 14:14 GMT
தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் யாரேனும் தங்கள் படிப்பை பாதியில் நிறுத்தினால் அதற்கு முழு காரணம் அரசு தற்போது அமல்படுத்தியுள்ள பொதுதேர்வு மட்டும்தான் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் தமிழக பள்ளிகளில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் அரசு அறிவித்துள்ளது. இதற்கு பெற்றோர்கள், அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் என பலதரப்பினர் மத்தியில் எதிர்ப்புகள் தோன்றின.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்ததாவது:

ஒரு தும்பியின் வாலில் பாறாங்கல்லை கட்டி பறக்கவிடுவது எவ்வளவு கொடுமையான விஷயமோ, அதைவிட கொடுமையானது 10 வயது பையன் மனதில் பொதுத்தேர்வு எனும் சுமையை கட்டிவைப்பது. இந்த கல்வி திட்டம் நம் குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை சொல்லிக் கொடுக்கும். இந்த திட்டத்தால் தேர்வு விகிதம் அதிகமாகாது. மாறாக, குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் தேர்வு பயம்தான் அதிகமாகும். 

ஜாதிகளாலும், மதங்களாலும் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை விட மதிப்பெண்களால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளால்தான் இப்போது பாதிப்பு அதிகமாக இருக்கப்போகிறது. இதனால் ஒரு குழந்தை சமூகத்தில் நாம் வாழ்வதற்கு தகுதியே இல்லையோ என்ற தாழ்வு மனப்பான்மைக்குள் மூழ்கிப் போகும்.

இனி ஏதாவது ஒரு குழந்தை தனது பள்ளிப்படிப்பை நிறுத்தினால் அதற்கு மாநில அரசு அமல்படுத்தியிருக்கும் 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டம் மட்டும்தான் முக்கிய காரணமாக இருக்கும். பள்ளி குழந்தைகளுக்கு எள்ளளவும் பயன்படாத இந்தத் திட்டத்தை மக்கள் நீதி மய்யம் வன்மையாக கண்டிப்பதுடன், திட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்துகிறது என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News