செய்திகள்
நாராயணசாமி

இந்தி திணிப்பை எதிர்த்து போராட்டம் - நாராயணசாமி அறிவிப்பு

Published On 2019-09-18 09:57 GMT   |   Update On 2019-09-18 09:57 GMT
இந்தி திணிப்பை எதிர்த்து புதுவையில் போராட்டம் நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி:

புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் ஓட்டல் சன்வேயில் நடந்தது.

மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத், அமைச்சர் ஷாஜகான், வைத்திலிங்கம் எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் விஜயவேணி, தீப்பாய்ந்தான் மற்றும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

டெல்லியில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் ராஜீவ் வைரவிழா, காந்தி 150-வது பிறந்த நாள் விழாவை அனைத்து மாநிலத்திலும் சிறப்பாக கொண்டாடவும், கவிதை, பேச்சு, ஓவிய போட்டிகள் நடத்தவும், பாதயாத்திரை செல்லவும் அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி புதுவையில், வரும் அக்டோபர் 2-ந் தேதி முதல் பல்வேறு விழாக்களை நடத்த உள்ளோம். காங்கிரஸ் கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்க்க கட்சித்தலைவர் சோனியா உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கெனவே உள்ள உறுப்பினர்கள் தங்களின் உறுப்பினர் அடையாள அட்டையை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். புதிய உறுப்பினர்களையும் சேர்க்க வேண்டும். கட்சிக்கு வரும் இளைஞர்கள் உடனடியாக எம்.எல்.ஏ., எம்.பி. பதவி கிடைக்கும் என நினைக்கின்றனர். காங்கிரஸ் கட்சியில் உழைப்பவர்களுக்குதான் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தாலும், சில மாநிலங்களில் வெற்றி பெற்றாலும் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியால் நிலைத்து நிற்க முடிகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசால் பொருளாதார வீழ்ச்சி பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது. ஆட்டோமொபைல் தொழில் மூடப்பட்டு வருகிறது.

தொழிலாளர்கள் வேலை இழக்கின்றனர். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கியில் இருந்து ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் கோடியை எடுத்து பண புழக்கத்தில் விடுகிறார்.

2008-ம் ஆண்டு பொருளாதார வீழ்ச்சியின்போது, பிரதமராக இருந்த மன்மோகன்சிங் அனைத்தையும் சமாளித்தார். இந்தியா வளர்ச்சி அடைந்தது.

தற்போது மத்திய அரசு இந்தி திணிப்பை கொண்டு வருகின்றது. இதை எதிர்த்து அக்டோபர் 15 முதல் 25-ந் தேதிக்குள் புதுவையில் போராட்டம் நடத்தப்படும். நகர மற்றும் கிராமப்புற காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களை ஒன்றிணைத்து பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Tags:    

Similar News