செய்திகள்
லாரிகள் ஸ்டிரைக்

நாளை ஸ்டிரைக் - கோவையில் நாளை 10 ஆயிரம் லாரிகள் ஓடாது

Published On 2019-09-18 08:58 GMT   |   Update On 2019-09-18 08:58 GMT
மத்திய அரசின் புதிய சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நாளை ஒரு நாள் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

கோவை:

அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு சட்டம் கொண்டு வந்து உள்ளது.

இதற்கு நாடு முழுவதும் உள்ள லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். சென்னையில் கடந்த 2 நாட்களாக கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் லாரிகளை இயக்காமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் மத்திய அரசின் இந்த புதிய சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நாளை (வியாழக்கிழமை) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி நாளை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இது குறித்து கோவை மாவட்ட லாரி உரிமையாளர் சங்க தலைவர் கலியபெருமாள் கூறியதாவது:-

நாடு முழுவதும் மொத்தம் 90 லட்சம் லாரிகள் உள்ளது. தமிழகத்தில் 4½ லட்சமும், கோவை மாவட்டத்தில் 10 ஆயிரம் லாரிகளும் உள்ளது. மத்திய, மாநில அரசுகள் ஏற்கனவே வாகன பதிவு கட்டணம், புதுப்பித்தல் கட்டணம், இன்சூரன்சு கட்டணம், சுங்கவரி கட்டணம் ஆகியவற்றை பல மடங்கு உயர்த்தி உள்ளது. மேலும் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. கட்டண உயர்வால் எங்கள் தொழில் மிகவும் நலிவடைந்து உள்ளது. நாங்கள் தொடர்ந்து தொழில் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

தற்போது மத்திய அரசு அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவித்து உள்ளது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாட்டில் விலைவாசி உயர்வை தடுக்கவும், பொருளாதார வளர்ச்சி சீராக இருக்கவும், லாரி உரிமையாளர்களுடன் மத்திய, மாநில அரசுகள் பேச்சு வார்த்தை நடத்தி லாரி தொழில் பாதிக்காதபடி தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவை மாவட்டத்தில் நாளை 10 ஆயிரம் லாரிகள் ஓடாது. இதன் காரணமாக ரூ. 10 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News