செய்திகள்
மெட்ரோ ரெயில் (கோப்புப்படம்)

வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் இடையே மெட்ரோ ரெயில் ஜூன் மாதம் ஓடும்

Published On 2019-09-18 06:32 GMT   |   Update On 2019-09-18 06:32 GMT
வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் இடையேயான விரிவாக்கம் பணிகள் முடிந்து அடுத்த ஆண்டு ஜூன் மாதம் மெட்ரோ ரெயில் ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை:

சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னை சென்ட்ரலில் இருந்து பரங்கிமலைக்கும், வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையத்துக்கும் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரை மெட்ரோ ரெயில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

விம்கோ நகரில் இருந்து வண்ணாரப்பேட்டை வரை உள்ள 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு பணிகள் நடந்து வருகிறது. தற்போது வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையத்துக்கு 23.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது.

விம்கோ நகரில் இருந்து விமான நிலையத்துக்கு மெட்ரோ ரெயில் இயக்கப்படும்போது 32.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு விம்கோ நகர்- வண்ணாரப்பேட்டை இடையேயான விரிவாக்கம் பணிகள் முடிந்து அடுத்த ஆண்டு ஜூன் மாதம் மெட்ரோ ரெயில் ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது 42 மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. விம்கோ நகர்- வண்ணாரப்பேட்டை இடையே விரிவாக்க பணிகள் முடிந்த பிறகு கூடுதலாக 10 புதிய மெட்ரோ ரெயில்கள் கொண்டு வரப்படுகின்றன. இந்த ரெயில்கள் ஆந்திராவில் ஸ்ரீசிட்டியில் உள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இதில் முதல் ரெயில் அடுத்த மாதம் சென்னை கொண்டு வரப்படுகிறது. பின்னர் படிப்படியாக மற்ற ரெயில்கள் கொண்டு வரப்படும். 10-வது ரெயில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரும்.

இது குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

“விம்கோ நகரில் இருந்து விமான நிலையம் வரை கூடுதலாக கொண்டு வரப்படும் 10 புதிய ரெயில்கள் இயக்கப்படும் போது வருங்காலத்தில் ‘பீக்அவரில்’ 2½ நிமிடத்துக்கு ஒரு ரெயில் விடப்படும்.

2½ நிமிடத்துக்கு ஒரு ரெயில் இயக்க வேண்டுமென்றால் ஒவ்வொரு வழித்தடத்துக்கும் 33 ரெயில்கள் தேவைப்படும். கூடுதலாக 10 புதிய ரெயில்கள் இயக்கப்படும் போது ஒரு வழித்தடத்தில் 2½ நிமிடத்தில் ஒரு ரெயில் இயக்கலாம்” என்றார்.

கடந்த ஆகஸ்டு மாதம் முதல் வண்ணாரப்பேட்டை- விமான நிலையம் வழித்தடத்தில் ‘பீக் அவரில்’ 5 நிமிடத்துக்கு ஒரு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. ‘பீக் அவரில்’ 35 ரெயில்களும், ‘பீக் அவர்’ இல்லாத நேரத்தில் 25 ரெயில்களும் இயக்கப்படுகின்றன.

Tags:    

Similar News