செய்திகள்
அய்யாக்கண்ணு

அய்யாக்கண்ணுவுக்கு டெல்லி போலீசார் சம்மன்

Published On 2019-09-17 11:26 GMT   |   Update On 2019-09-17 11:26 GMT
விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தியது தொடர்பாக அய்யாக்கண்ணுவுக்கு டெல்லி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

திருச்சி:

டெல்லியில் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ந்தேதி தமிழகத்தைச் சேர்ந்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாகண்ணு தலைமையில் அங்கு உள்ள ராம்லீலா மைதானத்தில் மத்திய அரசைக் கண்டித்து 2 நாட்கள் போராட்டம் நடந்தது.

இதில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும், விவசாயிகள் வாங்கிய வங்கி கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும், விவசாய பொருட்களுக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்ய வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

டெல்லியில் இந்த போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு விவசாயிகள் அவரவர் சொந்த மாநிலத்திற்கு சென்று விட்டனர். இந்த நிலையில் ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட 500 பேர் மீது டெல்லி ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் முன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பொது இடத்தில் சட்ட விரோதமாக கூடுதல், மிரட்டுதல், ரெயில்வே பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு அய்யாக்கண்ணு நாளை (18.9.19 )மாலை 3 மணிக்குள் நேரில் ஆஜராக வேண்டும் என டெல்லி ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இந்த வழக்கில் நேரில் ஆஜராகாவிட்டால் ரெயில்வே பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கைக்கு உள்ளாகுவீர்கள் என்றும் அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் அய்யாகண்ணு கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை நிலவுகிறது.

இந்தநிலையில் வழக்கில் ஆஜராவதற்காக திருச்சியில் இருந்து இன்று காலை அய்யாக்கண்ணு 3 வக்கீல்களுடன் டெல்லி புறப்பட்டு சென்றார். இதே போன்று மற்ற மாநில விவசாய சங்க தலைவர்கள், அவர்களுடன் சென்ற அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த 500 விவசாயிகள் ஆகியோருக்கும் டெல்லி ரெயில்வே பாதுகாப்பு படையில் இந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரி சம்மன் அனுப்பியுள்ளார்.

டெல்லி ரெயில்வே போலீஸ் விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி செல்லும் முன்பு இன்று காலை திருச்சி ரெயில் நிலையத்தில் அய்யாகண்ணு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த ஆண்டு டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகளை திரட்டி நாங்கள் நடத்திய போராட்டம் இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் மத்தியில் மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இந்த போராட்டம் நடைபெற்ற 10 மாதத்திற்கு பிறகு டெல்லி ரெயில்வே போலீசார் என் மீதும், 500 விவசாயிகள் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் நாளை டெல்லி ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் முன்பு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர். எங்களை அவர்கள் கைதும் செய்யலாம். சொந்த ஜாமீனிலும் விடுவிக்கலாம்.

எங்களை திகார் ஜெயிலில் அடைத்தாலும் பரவாயில்லை. 10 மாதத்திற்கு முன்பு நடந்த போராட்டத்திற்கு இப்போது வழக்குப்பதிவு செய்திருப்பது விவசாயிகளை போராட்ட களத்திலிருந்து விலக்கி வைக்கலாம் என்று அரசு நினைத்தால் நடக்காது. எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றினால் தான் போராட்டங்களில் இருந்து நாங்கள் விலகுவோம். டெல்லி போலீசார் எங்களை கைது திகார் ஜெயிலில் அடைத்தாலும் பரவாயில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News