செய்திகள்
ஜீப் பள்ளத்தில் விழுந்து கிடக்கும் காட்சி

போடிமெட்டு மலைச்சாலையில் 200 அடி பள்ளத்தில் ஜீப் உருண்டு 4 பேர் பலி

Published On 2019-09-17 05:04 GMT   |   Update On 2019-09-17 05:04 GMT
போடிமெட்டு சாலையில் 200 அடி பள்ளத்தில் ஜீப் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர்.
மேலசொக்கநாதபுரம்:

போடி அருகே உள்ள பண்ணைத்தோப்பை சேர்ந்தவர் கண்ணன் (வயது45). மேஸ்திரி. இவர் கேரள மாநிலம் பியால்ராவ் பகுதியை சேர்ந்த ஜீப் டிரைவர் முகேஷ் (25) என்பவருடன் சேர்ந்து ஏல தோட்டத்திற்கு ஆட்களை அழைத்து செல்வது வழக்கம்.

அதன்படி நேற்று மாலை பண்ணைத்தோப்பு, தோப்புபட்டி, போடி ஆகிய பகுதிகளை சேர்ந்த 21 பெண்களை ஏற்றிக்கொண்டு அழைத்து சென்றார். ஜீப் போடி மெட்டு மலைச்சாலையில் காற்றுதூக்கிபாறை என்ற இடத்தில் சென்றபோது ஜீப் டயர் வெடித்தது. இதில் நிலை தடுமாறிய ஜீப் 200 பள்ளத்தில் கவிழ்ந்தது.

உடனே ஜீப்பில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்து உயிருக்கு பயந்து கூச்சலிட்டனர். இதில் ஜீப் முழுவதும் சுக்குநூறாக உடைந்தது. கண்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் குரங்கணி போலீசார் அங்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே தனலட்சுமி (55), அன்னக்கிளி ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்த சின்னத்தாய் (22), பரமேஸ்வரி (24), ராணி (42), தமிழ்ச்செல்வி (30) உள்பட 21 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சிகிச்சையில் இருந்த பண்ணைத்தோப்பு பகுதியை சேர்ந்த உசேன் மனைவி நூர்ஜகான் (42) இன்று காலை உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. படுகாயம் அடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உத்தமபாளையம் சார் ஆட்சியர் வைத்தியநாதன் தாசில்தார் மணிமாறன் மற்றும் அதிகாரிகள் காயம் அடைந்தவர்களை பார்த்து ஆறுதல் கூறினர். மேலும் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

Similar News