செய்திகள்
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி நிருபர்களுக்கு பேட்டியளித்த காட்சி

உள்ளாட்சி தேர்தல்-நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் - ஜி.கே.மணி

Published On 2019-09-16 08:56 GMT   |   Update On 2019-09-16 08:56 GMT
வருகிற உள்ளாட்சி தேர்தலிலும் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்போம் என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி கூறினார்.
நெல்லை:

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி நெல்லையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் அடிக்கடி வறட்சி ஏற்பட்டு விவசாயம் மற்றும் குடிநீருக்கு பற்றாக்குறை உள்ளது. தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவிற்கு பெய்யவில்லை. தாமிரபரணி ஆற்றில் கோடை காலத்திலும் தண்ணீர் வீணாக கடலுக்கு செல்வது வேதனையளிக்கிறது. எனவே தாமிரபரணி ஆற்றில் உடனடியாக தடுப்பணை கட்டப்பட வேண்டும்.

இதேபோல் வைகை, காவிரி, தென்பெண்ணை, பாலாறு ஆகிய ஆறுகளிலும் தடுப்பணை கட்ட வேண்டும்.தமிழக அரசின் குடிமராமத்து பணிகள் வரவேற்கத்தக்கது. இதன் மூலம் அனைத்து ஏரி மற்றும் குளங்கள், கண்மாய்கள், கால்வாய்கள் தூர்வாரப்பட வேண்டும்.

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது தேவையற்றது. மாணவர்கள் தேர்ச்சி பெறுவது கட்டாயம். அதே போல் அவர்களுக்கு மேலும் தரமான கல்வி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டிஜிட்டல் போர்டுகளை வைக்கக்கூடாது என்ற கருத்தை பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனவே பேனர் வைப்பதை அனைவரும் தவிர்க்க வேண்டும். சுங்கச்சாவடியில் ஆண்டுக்கு ஆண்டு 20 சதவீதம் கட்டண உயர்வு வசூலிப்பது கண்டிக்கதக்கது. உடனடியாக அதனை ரத்து செய்ய வேண்டும். பராமரிப்பு செலவுக்காக குறைந்த கட்டணம் வேண்டுமானால் வசூலிக்கலாம். கட்டணம் அதிகமாக வசூலித்தால் பொதுமக்களே திரண்டு போராட்டம் நடத்துவார்கள்.

தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியடைய கங்கைகொண்டானில் புதிய தொழிற்சாலைகள் நிறுவப்பட வேண்டும். அதில் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டுக்கு சென்று ரூ.8 ஆயிரம் கோடிக்கு மேல் தொழில்கள் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது நல்ல முன் உதாரணம். அந்த தொழில்களை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரிகளில் விவசாயத்திற்கு மண் எடுப்பதாக கூறி அந்த மணலை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியா பன்முக தன்மை உள்ள நாடு. வேற்றுமையில் ஒற்றுமையே இதன் சிறப்பு. பல்வேறு மொழிகள், உணவுகள், பண்பாடுகள், திருமண கலாச்சாரங்கள் இந்த நாட்டில் உள்ளது. ஒரே நாடு, ஒரே மொழி என்பது மாநில மொழியை சிதைக்கும். தாய்மொழிக்காக உயிர் தியாகம் செய்த வரலாறு தமிழகத்திற்கு உண்டு. எனவே மாநில மொழிக்கு முக்கியத்துவம் தேவை. அதே போல் கல்வி முறையிலும் ஒரே கல்வி முறை ஏற்புடையதல்ல.

வருகிற உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும். நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.



Tags:    

Similar News