செய்திகள்
மழையினால் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கும் காட்சி.

நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் பரவலாக மழை

Published On 2019-09-14 04:52 GMT   |   Update On 2019-09-14 04:52 GMT
நெல்லை- தூத்துக்குடி மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை சரியாக பெய்ய வில்லை. கேரள பகுதிகளில் பெய்த மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள அணைகளுக்கு கூடுதல் தண்ணீர் வந்தது. இதனால் 5 சிறிய அணைகள் நிரம்பி, விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும், வெப்ப சுழற்சி காரணமாகவும் நெல்லை- தூத்துக்குடி மாவட்டங்களில் அவ்வப் போது மழை பெய்து வருகிறது. நேற்று நெல்லை- தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.

தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் நேற்று பிற்பகல் கனமழை பெய்ததால், விமானம் தரை இறங்க முடியாமல் மதுரைக்கு சென்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக மணியாச்சியில் 53 மில்லி மீட்டர் மழை பெய்தது.

நெல்லை மாவட்டத்தில் கொடுமுடியாறு அணை பகுதியில் அதிகபட்சமாக 60 மில்லி மீட்டர் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சில இடங்களில் மட்டும் லேசான சாரல் மழை பெய்தது. ஆனால் கடற்கரை பகுதியில் சில இடங்களில் கனமழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்தது.

மலை பகுதியில் மழை குறைவாக பெய்ததால் அணைகளுக்கு ஏற்கனவே வந்தது போல தண்ணீர் சற்று குறைவாகவே வருகிறது. இதனால் பாபநாசம் அணை நீர்மட்டம் தொடர்ந்து 119 அடியில் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 733.57 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

சேர்வலாறு அணை நீர்மட்டம் 129.33 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 49.55 அடியாக உள்ளது. இதுபோல மற்ற அணைகளிலும் தண்ணீர் அதே அளவில் உள்ளது.

Tags:    

Similar News