செய்திகள்
நட்சத்திர ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

கொடைக்கானலில் கனமழை- நிரம்பி வழிந்த நட்சத்திர ஏரி

Published On 2019-09-14 03:57 GMT   |   Update On 2019-09-14 03:57 GMT
கொடைக்கானலில் பெய்த கனமழை காரணமாக நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரி முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்தது.
கொடைக்கானல்:

கொடைக்கானலில் அதிகரித்து வரும் குடியிருப்புகளாலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பாலும் குடிநீர் வினியோகம் சீராக வழங்கப்படவில்லை. மேலும் நகருக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள மனோ ரத்தினம் சோலை அணை, நகராட்சி நீர் தேக்கம் ஆகியவற்றின் நீர் மட்டம் சரிந்து கொண்டே சென்றது.

அவ்வப்போது சாரல் மழை பெய்த போதும் அணைகளின் நீர் மட்டம் உயரவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளானார்கள். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொடைக்கானலில் மழை பெய்து வருகிறது. நேற்றும் கனமழை பெய்தது. இதனால் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரி முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்தது.

இதன் மூலம் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தற்காலிக தீர்வு காணப்பட்டுள்ளது. இருந்தபோதும் கனமழை ஒரு மாதத்துக்கு நீடித்தால் மட்டுமே நிலைமையை சமாளிக்க முடியும்.

தற்போது பெய்து வரும் மழை விவசாயிகளுக்கு ஏதுவாக உள்ளது. பீன்ஸ், உருளைக்கிழங்கு, சவ் சவ், பட்டாணி, காலிபிளவர், கேரட், முள்ளங்கி, பீட்ரூட், பூண்டு உள்ளிட்ட காய்கறிகள் செழித்து வளரத் தொடங்கியுள்ளன.

விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வரத் தொடங்கியுள்ளனர். மழை தொடர்ந்து பெய்த போதும் இயற்கை அழகை ரசித்தபடி உள்ளனர். மழை காரணமாக புதிய அருவிகள் உருவாகியுள்ளன. இது காண்போரின் கண்களை கவரும் வண்ணம் உள்ளது. வெள்ளி நீர் வீழ்ச்சியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

முக்கிய சுற்றுலா இடங்களான பிரையண்ட் பூங்கா, பசுமை பள்ளத்தாக்கு, தூண்பாறை, கோக்கர்ஸ்வாக், பைன் பாரஸ்ட் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக இயற்கை அழகை கண்டு ரசித்தனர். இதனால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஆப் சீசன் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் தற்போது இதமான சீதோஷ்ணம் நிலவி வருகிறது. எனவே கடந்த ஆண்டை விட சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News