செய்திகள்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தி.மு.க.வுடன் தினகரன் மறைமுக கூட்டணி வைத்துள்ளார்- ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு

Published On 2019-09-13 09:51 GMT   |   Update On 2019-09-13 09:51 GMT
அ.தி.மு.க.வின் எதிரியான தி.மு.க.விடம் தினகரன் மறைமுக கூட்டணி வைத்துள்ளார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.

விருதுநகர்:

விருதுநகரில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

பால்வளத்துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்று வந்துள்ளேன். வெளிநாட்டு சுற்றுப் பயணம் மிகப்பெரிய வெற்றியை தந்துள்ளது.

அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளுக்கு சென்று கால்நடை வளர்ப்பு தீவன உற்பத்தி போன்றவற்றை அறிந்து வந்துள்ளேன்.

பால்வளத் துறை சார்பில் சேலம் மாவட்டத்தில் கால்நடை ஆராய்ச்சி மையம் பசு வளர்ப்பு இனவிருத்தி, தீவன உற்பத்தி ஆகியவற்றை ஒருங்கிணைத்து மிகப்பெரிய அளவில் பால்பண்ணை அமைக்கப்படும்.

ஸ்டாலினை தவிர சமூக ஆர்வலர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் எங்களது வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை வரவேற்கிறார்கள்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளி நாட்டுக்கு சென்று ரூ. 2850 கோடி அளவில் தமிழகத்துக்கு முதலீட்டை ஈர்த்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் புதிதாக ஜவுளி தொழிற்சாலை அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக தகவல்கள் வந்துள்ளது. இது சம்பந்தமாக முதல்- அமைச்சரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.ஜி.ஆர். ரசிகர் இல்லை. சிவாஜி கணேசன் ரசிகர்.

எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இணைந்து வளர்த்த அ.தி.மு.க.வை அவர் எதிர்க்கிறார். அ.தி.மு.க.வின் எதிரியான தி.மு.க.விடம் மறைமுக கூட்டணி வைத்துள்ளார்.

அவரின் உண்மையான நிலைப்பாடு தெரிந்துதான் நாஞ்சில் சம்பத் அவரை விட்டுச் சென்றுவிட்டார். புகழேந்தி புலம்பிக் கொண்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News