செய்திகள்
முத்தரசன்- டிடிவி தினகரன்

பேனர் விழுந்து பெண் பலி: முத்தரசன், தினகரன் கண்டனம்

Published On 2019-09-13 08:24 GMT   |   Update On 2019-09-13 08:24 GMT
பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து பெண் என்ஜினீயர் சுபஸ்ரீ பலியானததற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன்,அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சென்னை:

பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து பெண் என்ஜினீயர் சுபஸ்ரீ பலியானததற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன்:-

பேனர் விழுந்ததால் சுபஸ்ரீ பலியானார் என்கிற செய்தி மிகத் துயரமானது. அரசியல் கட்சிகள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி சாலைகளை மறித்து பெரிய பேனர்களை வைப்பதன் மூலம் இத்தகைய துயரச் சம்பவங்கள் தொடர்கின்றன. நீதிமன்றம் தொடர்ந்து எச்சரித்தும் கூட அவைகள் மதிக்கப்படாத நிலை தொடர்கிறது. அதிகாரிகள், போலீசாரின் பாரபட்சமான நடவடிக்கைகள்தான் இத்தகைய துயரச் சம்பவங்களுக்கு காரணமாகும்.

சுபஸ்ரீயின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன், அவரது இழப்பிற்கு உரிய இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்:-

சென்னை பள்ளிக்கரணையில் அனுமதி இன்றி வைக்கப்பட்ட ஆளுங்கட்சியினரின் விளம்பரப் பதாகை சரிந்து விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. வெளிநாடு செல்வதற்கான கனவுகளோடு தேர்வை எழுதிவிட்டு வந்த சுபஸ்ரீயை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிகார வர்க்கத்தின் அலட்சியத்தால் நேர்ந்திருக்கிற இந்தத் துயர விபத்துக்கு காரணமான அனைவரையும் கடுமையாக தண்டிக்க வேண்டும்.

அரசியல் கட்சியினர், மற்ற அமைப்பினர், தனி நபர்கள் என யாரும் மக்களுக்கு இடையூறையும் இன்னலையும் ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற விளம்பரப் பதாகைகளை வைப்பதைத் தவிர்க்க வேண்டும். அந்தந்தப் பகுதியில் இதற்குப் பொறுப்பான அதிகாரிகள் உறுதியோடு இருந்து இவற்றைத் தடுக்க வேண்டும்.

பதாகை விழுந்ததால் கீழே சாய்ந்த சுபஸ்ரீ மீது கண்மூடித்தனமான வேகத்தில் வந்த லாரி மோதி உயிரைப் பறிக்க காரணமாகி இருக்கிறது. எனவே கனரக வாகனங்களின் வேகத்தைக் கண்காணித்து கட்டுப்படுத்தவும் போக்குவரத்து காவல்துறையினர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஈடுசெய்ய முடியாத இத்தகைய உயிரிழப்புகள் இனி ஒருபோதும் நடக்காதபடி அனைத்துத் தரப்பினரும் பொறுப்போடும், சமூக அக்கறையோடும் நடந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

துயரமான இந்த நிகழ்வை எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு இனி வரும் நாட்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகளும், தொண்டர்களும் கழக நிகழ்ச்சிகள் எதற்கும் இது போன்று சாலை மையத்திலும், நடைபாதை ஓரங்களிலும் பதாகைகள் வைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

இவர்கள் அவர்கள் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News