செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் பரிசீலனை செய்து மோட்டார்வாகன சட்ட திருத்தம் அமல்படுத்தப்படும்- முதலமைச்சர் அறிவிப்பு

Published On 2019-09-12 06:26 GMT   |   Update On 2019-09-12 06:26 GMT
தமிழகத்தில் பரிசீலனை செய்து மோட்டார்வாகன சட்ட திருத்தம் அமல்படுத்தப்படும் என்று கோவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை:

நாடு முழுவதும் மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தின்படி கூடுதல் அபராதம் விதிக்கும் நடைமுறை கடந்த 1-ந்தேதி அமலுக்கு வந்துள்ளது.

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் இன்னும் அமல்படுத்தவில்லை.

இந்த நிலையில் புதிய சட்டத்திருத்த மசோதாவை தமிழகத்தில் பரிசீலனை செய்து செயல்படுத்துவோம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கோவையில் அவர் அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி:- மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை கேரள அரசு நிறுத்தி வைக்கப்போவதாக தகவல் வெளியாகிறதே, அதை போல ஒரு முடிவை தமிழ்நாடு அரசு எடுக்குமா?

பதில் :- மத்திய அரசு, நல்ல திட்டங்களை அறிவித்தால் நாங்கள் ஆதரிப்போம். அதே வேளையில் இன்றைக்கு மோட்டார் வாகன சட்டம் என்பது மிக ஒரு நல்ல சட்டம். இன்றைக்கு சட்டத்தின் வாயிலாக கட்டுப்படுத்த முடியும். நான் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றபோது இதனையும் ஒரு கருத்தாக பார்த்தோம்.

108 ஆம்புலன்ஸ் சேவை வசதியில் லண்டன் ஆம்புலன்ஸ் சேவை வசதியையும் செயல்படுத்த நாங்கள் ஆலோசனை நடத்தினோம். இன்றைக்கு விபத்துகள் எப்படி நடக்கிறது. போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறபோது விபத்துகள் நடக்கிறது.

போக்குவரத்து விதிகளை மீறுகின்றபோதும் விபத்துகள் நடக்கிறது. அரசு என்ன செய்ய வேண்டும், போக்குவரத்து விதிகளை மீறுகின்றவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்தால்தான் விபத்துகளை கட்டுப்படுத்த முடியும்.

வெளிநாடுகளில் எல்லாம் மூன்று முறை விதிகளை மீறினால் தானாகவே லைசென்ஸ் கேன்சல் ஆகி விடும். நாங்கள் அமெரிக்காவிற்கு போகும்போதும் சரி, துபாய், இங்கிலாந்துக்கு போகும்போதும் சரி, இங்கிலாந்தில் டிராபிக்கே கிடையாது, போக்குவரத்து போலீசே கிடையாது. எல்லா சிக்னல்களையும் கம்ப்யூட்டருடன் இணைத்துள்ளனர்.

நீங்கள் விதியை மீறினீர்கள் என்றால் ஆட்டோமெட்டிக்காக, உங்கள் வண்டி நம்பர் பதிவாகிவிடும். உடனே அவங்களுக்கு மெமோ போய்விடும். விதிகளை மீறுகின்ற போதுதான் விபத்துகள் நடக்கின்றது. ஆகவே இந்த விபத்துகளை எப்படி தடுக்க முடியும்.

இதனை தடுப்பதற்கு மத்திய அரசு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது. சில அரசுகள் நடவடிக்கை எடுக்கிறது. சில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. நாங்கள் அதனை பரிசீலித்து எந்தெந்த வகையில் செயல்படுத்த வேண்டுமோ அந்த வகையில் செயல்படுத்துவோம்.

கேள்வி:- ஒடிசா மாநிலத்தில் இலவச ஹெல்மெட் கொடுத்து, அபராதத்தையும் விதிக்கிறார்கள், அதுபற்றி...

பதில்:- ஏற்கனவே நம்முடைய பகுதியில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து பெரும்பாலும் இன்றைக்கு ஹெல்மெட் அணிந்துதான் போய் கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலர் விதிமுறைகளை மீறுகின்றபோது அவர்களிடத்திலே அபராதம் வசூலிக்கப்படுகின்றது.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
Tags:    

Similar News