செய்திகள்
நிகழ்ச்சியில் சத்குரு பேசியபோது எடுத்த படம்.

ஓசூர் வந்த சத்குருவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

Published On 2019-09-11 11:32 GMT   |   Update On 2019-09-11 11:32 GMT
காவேரி கூக்குரல் இயக்கத்துக்காக மோட்டார் சைக்கிள் பேரணி மேற்கொண்டுள்ள சத்குரு கர்நாடகத்தில் இருந்து இன்று தமிழகம் வந்தார். அவருக்கு அத்திப்பள்ளியில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஓசூர்: 

காவேரி கூக்குரல் இயக்கத்துக்காக 3,500 கி.மீ. மோட்டார் சைக்கிள் பேரணி மேற்கொண்டுள்ள சத்குரு கர்நாடகத்தில் இருந்து இன்று தமிழகம் வந்தார். அவருக்கு கர்நாடக- தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

அதன்பிறகு, அதியமான் பொறியியல் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் சத்குரு பங்கேற்று உரை நிகழ்த்தினார். இவ்விழாவில் கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினர் செல்லகுமார், ஓசூர் எம்எல்ஏ சத்யா, மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று உரையாற்றினர். 

இவ்விழாவில் சத்குரு பேசியதாவது:-

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 4 போர்கள் நடந்துள்ளன. 3 போர்கள் பாகிஸ்தானுடனும் ஒரு போர் சீனாவோடும் நடந்துள்ளது. இதில் இரு தரப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட நம் தேசத்தில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை அதிகம். நம் தேசத்தில்  கடந்த 20 ஆண்டுகளில் 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

காவிரி என்றாலே ஓ ‘காவிரி பிரச்சனையா?’ என கேட்கின்றனர். காவேரி என்றதும் ‘காவேரி தாய்’ என்பது நம் நினைவுக்கு வர வேண்டாமா? நாம் பிரச்சனையின் பக்கம் நிற்கப்போகிறமோ அல்லது தீர்வின் பக்கம் நிற்கபோகிறமோ என்பது நம் கையில்தான் உள்ளது. 

அடுத்த 12 ஆண்டுகளில் காவேரி நதியை மீண்டும் பழைய படி பெருக்கெடுத்து ஓட வைக்க அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். 

இவ்வாறு சத்குரு பேசினார். 

பின்னர் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேசியதாவது:-

காவேரி நதி நம் தமிழகத்தின் உயிர்நாடி. காவேரிக்காக நாம் பல போராட்டங்களை நடத்தி இருக்கிறோம். பாராளுமன்றத்தில் பல நாட்கள் அவையை முடக்கி இருக்கிறோம். ஆனால் அந்த போர்க்குரலால் பயன் கிடைக்காது என்று தெரிந்துதான் சத்குரு இந்த காவேரி கூக்குரல் இயக்கத்தை தொடங்கி உள்ளார். 242 கோடி மரங்கள் நடுவதன் மூலம் காவேரி வடிநிலப் பகுதிகளில் மண் வளம் பெருகும். விவசாயத்துக்கு மட்டுமின்றி குடிநீர் பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும்’ என்றார்.
Tags:    

Similar News