செய்திகள்
கிராம மக்களால் தாக்கப்பட்ட பள்ளி ஆசிரியர்

பள்ளி வளாகத்தில் ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்த கிராம மக்கள்

Published On 2019-09-11 06:42 GMT   |   Update On 2019-09-11 06:42 GMT
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள பள்ளி வளாகத்தில் ஆசிரியருக்கு கிராம மக்கள் தர்ம அடி கொடுத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரண நடத்தி வருகின்றனர்.
கொல்லிமலை:

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்துள்ள எஸ்.உடுப்பம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியராக ஜெயராஜ் என்பவரும், ஆசிரியராக சரவணன் (வயது 35) என்பவரும் உள்ளனர்.

இப்பள்ளியின் அருகே செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் உடுப்பம் பகுதியை சேர்ந்த ஜெயந்தி(32) என்பவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் உடுப்பம் கிராம மக்களிடம் பணத்தை பெற்று தபால் நிலையத்தில் வைப்பு நிதி செலுத்தி வரும் பணியையும் செய்து வருகிறார்.

இந்த நிலையில் ஜெயந்தி மற்றும் ஆசிரியர் சரவணன் இடையே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையடுத்து பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறையில், தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் இது குறித்து தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர். இருவரையும் தலைமை ஆசிரியர் அழைத்து கண்டித்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் கழிவறையில் உல்லாசமாக இருந்தபோது, தலைமை ஆசிரியரிடம் கையும், களவுமாக மாட்டிக் கொண்டனர். அப்போது இருவரையும் அவர் கடுமையாக எச்சரித்து அனுப்பினார். மேலும், இந்த தகவல் ஜெயந்தி குடும்பத்துக்கும் தெரியவந்தது.

இதற்கிடையே அங்கன்வாடி ஆசிரியை ஜெயந்தி கிராம மக்களிடம் வசூலித்த பணத்தை தபால் நிலையத்தில் முறையாக கட்டாமல் மோசடி செய்ததாக புகார் வந்தது. இது பற்றி தெரியவந்ததும் தங்களுடைய பாஸ்புக் கொடுங்கள். நாங்கள் தபால் நிலையத்தில் எவ்வளவு பணம் செலுத்தப்பட்டுள்ளது என்பதை பார்க்கிறோம் என கிராம மக்கள் கேட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஜெயந்தி பாஸ்புக் அனைத்தையும் அங்கன்வாடி மையத்தில் வைத்திருந்தார். இது குறித்து கிராம மக்கள் அவரிடம் விசாரிப்பதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்றனர்.

அப்போது அவர் மருத்துவ விடுப்பில் வெளியூர் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. நேற்று காலை காரில் அங்கன்வாடி மையத்துக்கு வந்த ஜெயந்தி, அங்கு வைத்திருந்த கிராம மக்களின் சேமிப்பு கணக்கு புத்தகங்களை எடுத்துச் சென்று விட்டார்.

இது குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள், பள்ளிக்கு திரண்டு வந்தபோது, அங்கு ஜெயந்தி இல்லை. இதையடுத்து ஆசிரியர் சரவணனிடம் ஜெயந்தி எங்கே? என கேட்டு அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சரவணன், ஜெயந்திக்கு ஆதரவாகவும், பொதுமக்களை தகாத வார்த்தையாலும் பேசியதாக தெரிகிறது.

இதில் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் ஆசிரியர் சரவணனுக்கு தர்ம அடி கொடுத்து பள்ளியில் இருந்து குண்டுகட்டாக இழுத்துச் சென்று கிராமத்தின் நடுவில் உட்கார வைத்தனர். இங்கு ஜெயந்தி வந்தால் மட்டுமே அவரை விடுவிப்போம் என்றனர். புதுச்சத்திரம் போலீசார் அங்கு சென்று சரவணனை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இதனை தொடர்ந்து போலீஸ் நிலையத்துக்கு சென்ற கிராம மக்கள், தங்கள் சேமிப்பு பணத்தை மோசடி செய்த ஆசிரியை ஜெயந்தி மற்றும் சரவணன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தனர். மேலும் சரவணன் தரப்பிலும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரை வாங்கி வைத்துக் கொண்டு போலீசார் நாளை (இன்று) விசாரணைக்கு வருமாறு கூறி சரவணனையும், பொது மக்களையும் அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார், ஜெயந்தி எங்கு உள்ளார்? என விசாரணை நடத்தியதில், அவர் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. போலீசார், அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆசிரியர் சரவணன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், காரைக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பணியாற்றிய போது, மாணவர்களின் பெற்றோர்களுக்கு வந்த அரசின் உதவித்தொகையை, பெயர் மோசடி செய்து எடுத்த வழக்கில் ஜெயில் சென்று, சஸ்பெண்டு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் ஆசிரியர் சரவணனையும், மோசடி செய்த ஜெயந்தியையும் பணி நீக்கம் செய்ய வேண்டும் என எஸ்.உடுப்பம் பகுதி மக்கள் நாமக்கல் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News