செய்திகள்
நாகர்கோவிலில் உள்ள ஒரு வீட்டில் அத்தப்பூ கோலமிட்ட பெண்கள்.

இன்று திருவோண திருவிழா- குமரியில் மாவேலி ஊர்வலத்துடன் ஓணம் கொண்டாடிய கேரள மக்கள்

Published On 2019-09-11 05:13 GMT   |   Update On 2019-09-11 05:13 GMT
திருவோண திருவிழாவையொட்டி குமரி மேற்கு மாவட்ட பகுதியில் இன்று காலை முதலே பல இடங்களில் மாவேலி ஊர்வலம் நடந்தது. இதில் மன்னன் வேடமிட்டு சென்றவர்கள் முத்துக்குடை ஏந்தியபடி மலர்களை தூவி மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
நாகர்கோவில்:

கேரள மாநிலத்தின் அறுவடை திருநாளான திருவோண பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.

கேரள மாநிலத்தின் எல்லையில் அமைந்துள்ள குமரி மாவட்டத்திலும் ஓணம் கொண்டாட்டம் நடப்பது வழக்கம். இங்கும் ஏராளமான கேரள மக்கள் வசித்து வருகிறார்கள்.

ஓணப்பண்டிகை தொடங்கிய நாள் முதல் இவர்களின் வீடுகளிலும் உற்சாகம் களை கட்டும். வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு ஓணத்தை வரவேற்றனர்.

ஓணப்பண்டிகையின் ஐதீகமான மாவேலி மன்னன் மக்களை சந்திக்க வருவதை குறிக்கும் வகையில் கேரளாவில் இன்று மாவேலி மன்னன் வேடமிட்டவர்கள் ஊர்வலமாக செல்வார்கள். வீடு வீடாகச் சென்று மக்களுக்கு வாழ்த்து கூறுவார்கள்.

குமரி மேற்கு மாவட்ட பகுதியில் இன்று காலை முதலே பல இடங்களில் மாவேலி ஊர்வலம் நடந்தது. இதில் மன்னன் வேடமிட்டு சென்றவர்கள் முத்துக்குடை ஏந்தியபடி மலர்களை தூவி மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

ஓணப்பண்டிகையின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று ஓண விருந்து. இன்று ஓணம் கொண்டாடும் மக்கள் வீடுகளில் ஓணவிருந்து தயாரித்து உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பரிமாறி மகிழ்ந்தனர்.

ஓண விருந்தில் அறுசுவை பதார்த்தங்கள் இடம் பெற்றிருந்தது. விருந்து நிகழ்ச்சி முடிந்த பின்பு வாலிபர்கள் புலி வேடமிட்டு விளையாடி மகிழ்ந்தனர். ஆடு புலி ஆட்டம், களரி, கம்பு சுற்றுதல் போன்ற ஆட்டங்களும் களை கட்டியது.

பெண்கள் ஊஞ்சலாடியும், பல்லாங்குழி விளையாடியும் மகிழ்ந்தனர். பெண்களுக்காக கோலப் போட்டிகளும் நடந்தது.

திருவோண திருவிழாவான இன்று காலையில் ஓணம் கொண்டாடும் மக்கள் கோவில்களுக்கு சென்று வழிபட்டனர். இதற்காக கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

நாளை ஓணப்பண்டிகையின் இறுதிநாள் கொண்டாட்டம் நடக்கிறது. இதையொட்டி குமரி மாவட்ட சுற்றுலா தளங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும்.
Tags:    

Similar News