செய்திகள்
கைது

பீகார் குண்டுவெடிப்பு குற்றவாளிகளுடன் தொடர்பு?- நீலாங்கரையில் பதுங்கி இருந்த மேற்குவங்க வாலிபர் கைது

Published On 2019-09-10 10:27 GMT   |   Update On 2019-09-10 10:27 GMT
பீகார் மாநிலம் புத்த கயாவில் கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்த மேற்குவங்க வாலிபரை நீலாங்கரையில் போலீசார் கைது செய்தனர்.

சென்னை:

பீகார் மாநிலம் புத்த கயாவில் கடந்த 2013-ம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதில் பயங்கரவாதிகள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த பயங்கரவாதிகள் பயன்படுத்திய செல்போன் எண்ணை ஆய்வு செய்த போது மேற்குவங்காளத்தை சேர்ந்த ஷேக் அப்துல்லா என்ற வாலிபருடன் அவர்கள் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது.

இதனைத்தொடர்ந்து பீகார் போலீசார் மேற்கு வங்காள போலீசை தொடர்புகொண்டு இந்த தகவலை தெரிவித்தனர். ஷேக் அப்துல்லா பற்றி விசாரணை நடத்தியபோது அவர் சென்னையில் நீலாங்கரையில் தங்கி இருப்பது தெரிந்தது.

இதனையடுத்து மேற்கு வங்காள போலீசார் சென்னைக்கு வந்து விசாரணை நடத்தினர். நீலாங்கரையில் பதுங்கி இருந்த ஷேக் அப்துல்லாவை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரை நீலாங்கரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் ஷேக் அப்துல்லாவை ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் மேற்குவங்காளத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள். திருநீர்மலை பகுதியில் தங்கி இருந்த ஷேக் அப்துல்லா சமீபத்தில்தான் நீலாங்கரைக்கு வந்து குடியேறியுள்ளார். இவர் சென்னையில் தங்கி இருந்து சதித்திட்டம் எதையும் தீட்டினாரா? என்பது பற்றி அவரது செல்போனை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இதுபற்றி சென்னை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ஷேக் அப்துல்லாவுக்கு பீகார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. ஆனால் பயங்கரவாத அமைப்பினர் சிலருடன் அவர் தொடர்பில் இருந்துள்ளார். அந்த அடிப்படையிலேயே விசாரணை நடந்து வருகிறது என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News