செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூரில் விற்பனையாகும் பால்கோவா

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு புவிசார் குறியீடு

Published On 2019-09-10 10:27 GMT   |   Update On 2019-09-10 10:27 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு இன்று புவிசார் குறியீடு இன்று வழங்கப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர்:

ஒரு பொருள் மீது பயன்படுத்தப்படும் பெயர் அல்லது சின்னம் புவிசார் குறியீடு என்று அழைக்கப்படுகிறது. இந்த குறியீடு அந்த பொருள் புவிசார்ந்து பெறும் தரத்தின் நன்மதிப்பை விளக்கும்.

இவ்வாறு புவிசார் குறியீடு பெற்றுள்ள பொருளை சம்பந்தப்பட்ட ஊரை தவிர மற்ற இடங்களில் தயாரித்து சந்தைப்படுத்த முடியாது.

தமிழகத்தில் விவசாய உற்பத்தி பொருட்கள், உணவு வகைகள், கைவினைப்பொருட்கள் என இதுவரை 31 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் என்றாலே அங்கு விற்பனையாகும் பால்கோவாதான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அதன் தனிச்சுவை மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

பால்கோவாவுக்கு புவிசார் குறியீடு பெறும் வகையில் கடந்த 2013-ம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் தமிழக அரசாணையில் இது தொடர்பான அறிவிப்பு வெளியானது. அதன் தொடர்ச்சியாக பால்கோவாவின் உற்பத்தி தன்மை, அதன் வரலாறு குறித்து ஆய்வு செய்யப்பட்டு இபபோது புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

இந்த தகவலை ஸ்ரீவில்லிபுத்தூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் தெரிவித்துள்ளது. மும்பையில் உள்ள புவிசார் குறியீடு பதிவாளர் குப்தா, வக்கீல் சஞ்சய் காந்தியிடம் புவிசார் குறியீட்டை வழங்குகிறார்.

மேலும் கோவில்பட்டி கடலைமிட்டாய், மணப்பாறை முறுக்கு உள்பட 18 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக வக்கீல் சங்க தலைவர் சஞ்சய்காந்தி தெரிவித்துள்ளார்.



Tags:    

Similar News