செய்திகள்
தோவாளை பூ மார்க்கெட்டில் குவிந்திருந்த வியாபாரிகள்

தோவாளை மார்க்கெட்டில் ஓணம் பண்டிகையையொட்டி 1000 டன் பூக்கள் விற்பனை

Published On 2019-09-10 05:30 GMT   |   Update On 2019-09-10 05:30 GMT
தோவாளை மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட பூக்களில் 1000 டன் பூக்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது. அதிகமான பூக்கள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளது.
நாகர்கோவில்:

தோவாளை பூ மார்க்கெட்டிற்கு ஓசூர், ராயக்கோட்டை, சத்தியமங்கலம், பெங்களுரூ, சேலம், மதுரை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்தும், நெல்லை மாவட்டம் பழவூர், ஆவரைகுளம், சங்கரன்கோவில், குமார புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு வருகிறது.

தோவாளை பூ மார்க்கெட் பண்டிகை காலங்களிலும், சுபமுகூர்த்த தினங்களிலும் களைகட்டி இருக்கும். ஓணம் பண்டிகையையொட்டி 10 நாட்கள் விற்பனை அதிகமாக காணப்படும். ஓணம் பண்டிகைக்கு முந்தைய நாள் இரவு விடிய விடிய பூக்கள் வியாபாரம் நடைபெறும்.

ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் நேற்று இரவு தோவாளை பூ மார்க்கெட் களைகட்டி இருந்தது. விடிய விடிய பூக்கள் வியாபாரம் நடந்தது. இன்று காலையிலும் பூக்களை வாங்குவதற்கு கேரளாவில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர்.

பூக்கள் விற்பனைக்காக வெளியூர்களில் இருந்து லாரிகளில் கொண்டுவரப்பட்டிருந்தது. சுமார் 2 ஆயிரம் டன் பூக்கள் விற்பனைக்கு வந்திருந்தது. கலர் பூக்களே அதிக அளவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு இருந்தது.

பூக்கள் வரத்து அதிகமாக இருந்ததால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பூக்களின் விலை குறைவாகவே இருந்தது. வியாபாரிகளும் குறைவாகவே வந்திருந்தனர். இதனால் பூக்கள் விற்பனையும் மந்தமாக காணப்பட்டது. விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட பூக்கள் லாரிகளில் இருந்து இறக்காமல் அப்படியே நிறுத்தியிருந்தனர்.

நள்ளிரவு பூக்கள் விற்பனை செய்த விலையை விட இன்று காலையில் விலை குறைந்து காணப்பட்டது. விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட பூக்களில் 1000 டன் பூக்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது. அதிகமான பூக்கள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்து உள்ளது.

ரூ.300-க்கு விற்கப்பட்ட அரளிப்பூ கிலோ ரூ.100-க்கும், மஞ்சள் கேந்தி ரூ.25, சிவப்பு கேந்தி ரூ.30, ரோஜா ரூ.60, சிவந்தி ரூ.40, வாடாமல்லி ரூ.60, கொளுந்து ரூ.70, சம்பங்கி ரூ.200-க்கு விற்பனையானது.

பிச்சி, மல்லிகை பூக்களின் விலை கடந்த ஆண்டு ஓணம் பண்டிகையின்போது கிலோ ரூ.1,500 ஆயிரம் வரை விற்பனையானது. ஆனால் இன்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.700-க்கும், பிச்சிப்பூ ரூ.400-க்கும் விற்கப்பட்டது.

பூக்கள் விற்பனை குறித்து வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

ஓணம் பண்டிகையையொட்டி பூக்கள் விற்பனை அதிகமாக நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தைவிட குறைவான அளவே வியாபாரிகள் வந்திருந்தனர். பூக்கள் கடந்த ஆண்டை விட அதிக அளவு விற்பனைக்கு வந்திருந்தது. இதனால் விலை சரிந்து காணப்பட்டது. பூக்களும் அதிக அளவில் தேக்கம் அடைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News