செய்திகள்
தூர்வாரும் பணியை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

தமிழகம் முழுவதும் குளங்கள் தூர்வாரப்படும் - உதயநிதி ஸ்டாலின்

Published On 2019-09-09 05:38 GMT   |   Update On 2019-09-09 05:38 GMT
திமுக இளைஞர் அணி மூலம் தமிழகம் முழுவதும் குளங்கள் தூர்வாரப்படும் என்ற உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருவாரூர்:

தி.மு.க. இளைஞரணி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள குளங்களில் நீரை சேமிக்கும் வகையில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி திருவாரூர் அருகே கூடூர் ஊராட்சி நாரணமங்கலத்தில் உள்ள திருவாசல்குளம் தூர்வாரும் பணி தி.மு.க. இளைஞரணி சார்பில் இன்று காலை நடைபெற்றது.

இந்த தூர்வாரும் பணியை தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ, மன்னார்குடி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜா, முன்னாள் எம்.பி விஜயன், முன்னாள் எம்.எல்.ஏ. அசோகன், மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் சங்கர், தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் இளையராஜா, துணை அமைப்பாளர் ரஜினி சின்னா, திருவாரூர் ஒன்றியச் செயலாளர் தேவா, நகரச்செயலாளர் பிரகாஷ், கூடூர் கிளைச்செயலாளர் மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்பின்னர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் ஏரி குளங்களை தூர்வாரும் பணியில் தங்களையும் ஈடுபடுத்திக் கொள்வது என தி.மு.க. இளைஞர் அணி முடிவு செய்துள்ளது. அந்த வகையில் மதுரையில் உள்ள ஒரு கண்மாய் குளம் தூர்வாரும் பணிகளை மேற் கொண்டுள்ளோம். அதுபோல் இன்றைக்கு திருவாரூரில் உள்ள இந்த குளத்தை தூர்வாரும் பணியை தொடங்கி வைத்திருக்கிறோம். இதனை தொடர்ந்து திருக்குவளையில் உள்ள ஒரு குளத்தை தூர்வாரும் பணியை மேற்கொள்ள உள்ளோம்.

இதுபோல் தமிழகம் முழுவதும் வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் குளம் தூர் வாருவது என முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பணிகளை தி.மு.க. இளைஞர் அணியினர் சிறப்பாக செய்து முடிப்பார்கள்.

தி.மு.க. இளைஞரணி சார்பில் உறுப்பினர் சேர்க்கை பணியை வருகிற செப்டம்பர் 14-ந் தேதி முதல் தொடங்க உள்ளோம். தமிழகம் முழுவதும் 30 லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பது என்ற இலக்குடன் எங்களுடைய பணி தொடங்கப்படுகிறது. இந்த இலக்கை மிஞ்சுகின்ற வகையில் உறுப்பினர் சேர்க்கை இருக்கும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

Tags:    

Similar News