செய்திகள்
வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

தமிழ்நாடு, புதுச்சேரியில் வக்கீல்கள் நாளை கோர்ட்டு புறக்கணிப்பு

Published On 2019-09-09 03:16 GMT   |   Update On 2019-09-09 03:16 GMT
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 80 ஆயிரம் வக்கீல்கள் நாளை கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபடுவார்கள் என்று கூட்டமைப்பு தலைவர் கூறினார்.
கோவை:

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்கங்களின் கூட்டுக்குழு தலைவர் நந்தகுமார் கோவையில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமானியை மேகாலயா ஐகோர்ட்டுக்கு இடமாற்றம் செய்து சுப்ரீம் கோர்ட்டு பரிந்துரை செய்துள்ளது. இது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. சுப்ரீம் கோர்ட்டு பரிந்துரையை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளக்கூடாது. அவரை தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பணியாற்றி அனுமதிக்க வேண்டும். இதே போல தனது பதவியை ராஜினாமா செய்ததை தலைமை நீதிபதி தஹில் ரமானி மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

பாரம்பரியமிக்க சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பணியாற்றி வருபவரை சிறிய மாநிலத்தின் ஐகோர்ட்டுக்கு இடமாற்றம் செய்தது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. இதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.

தஹில்ரமானிக்கு பதவி உயர்வு கொடுத்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கலாமே தவிர சிறிய மேகலாயா ஐகோர்ட்டுக்கு இடமாற்றம் செய்தது வக்கீல்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே தலைமை நீதிபதி தஹில் ரமானியை சென்னையிலேயே பணியாற்ற உத்தரவிட வலியுறுத்தி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கோர்ட்டுகளில் பணியாற்றும் வக்கீல்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவார்கள். இதில் சுமார் 80 ஆயிரம் வக்கீல்கள் கலந்து கொள்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News