செய்திகள்
கைதானவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களையும் படத்தில் காணலாம்.

திருச்சி அருகே போலி மது ஆலை கண்டுபிடிப்பு - அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் கைது

Published On 2019-09-07 04:20 GMT   |   Update On 2019-09-07 04:20 GMT
திருச்சி அருகே போலி மது ஆலை கண்டுபிடிப்பு அண்ணன்-தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி:

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் போலி மதுபானங்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. இது பற்றி போலீசார் விசாரணை நடத்திய போது, திருச்சி மாவட்டம் மணிகண்டம் பகுதியில் இருந்துதான் போலி மது பானங்கள் சப்ளை செய்யப்படுவதாக தெரியவந்தது. இது குறித்து திருச்சி மதுவிலக்கு மத்திய புலனாய்வுப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏற்கனவே போலி மதுபானம் தயாரித்த வழக்கில் அங்கு வேலை பார்த்த கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த பாலகிருஷ்ணனின் மகன்களான மதன்(வயது 23), சுமன்(20) ஆகியோர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் இருப்பதும், அவர்கள் அடிக்கடி திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே அளுந்தூர் பகுதிக்கு அடிக்கடி வந்து செல்வதும் தெரியவந்தது. உடனே அண்ணன், தம்பி 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அளுந்தூரை சேர்ந்த நாகராஜ்(36) என்பவரின் குடிசை வீட்டில் வைத்து போலி மதுபானம் தயாரித்து, அவற்றை விராலிமலை மற்றும் பேராம்பூர் பகுதியில் விற்பனை செய்வதும், தஞ்சாவூரில் ஏற்கனவே போலி மது ஆலை நடத்திய பாக்கெட் ராஜா என்ற ராஜ்குமார்(35) மற்றும் விராலிமலை அருகே உள்ள ராமகவுண்டம்பட்டியை சேர்ந்த ரமேஷ்(50) ஆகியோர் இதற்கு உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் நள்ளிரவில் அளுந்தூருக்கு சென்று நாகராஜின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு போலி மது தயாரிப்பதற்கான எரிசாராயம், மினரல்வாட்டர், மதுவுக்கான எசன்ஸ், போலி லேபிள்கள், 14 ஆயிரம் மதுபாட்டில் மூடிகள், மூடியில் ஒட்டுவதற்கான ஹாலோகிராம் ஸ்டிக்கர்கள், 3 எந்திரங்கள், 3 ஆயிரம் காலிபாட்டில்கள் ஆகியவை இருந்தன.

இதைத்தொடர்ந்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்ததுடன், அந்த போலி மதுபான ஆலைக்கு ‘சீல்’ வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மதன், சுமன், நாகராஜ் ஆகியோரை கைது செய்தனர். மேலும், ராஜ்குமார், ரமேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News