செய்திகள்
ஒகேனக்கல் ஐவர்பாணி அருவியில் பொங்கிபாயும் புதுவெள்ளம்.

கர்நாடக அணைகளில் இருந்து இன்று நீர்திறப்பு 54 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

Published On 2019-09-05 04:37 GMT   |   Update On 2019-09-05 04:37 GMT
கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து மொத்தம் 54 ஆயிரத்து 511 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
பென்னாகரம்:

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய பகுதிகளில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால் கே.ஆர்.எஸ்., கபினி, ஹேரங்கி உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

நேற்று கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து 42 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று காலை 6 மணி முதல் நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. கே.ஆர்.எஸ். அணையின் மொத்த நீர்மட்டம் 124.80 அடி ஆகும். இன்று காலை அணை மீண்டும் நிரம்பிவிட்டது. அணையில் 124.80 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 18 ஆயிரத்து 210 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து 24 ஆயிரத்து 511 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

கபினி அணையின் மொத்த நீர்மட்டம் 84 அடி ஆகும். இன்று காலை அந்த அணையின் நீர்மட்டம் 83.23 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 21 ஆயிரத்து 962 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து 30 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. அதாவது கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து மொத்தம் 54 ஆயிரத்து 511 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

இன்று மாலை இந்த தண்ணீர் பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் வந்தடையும். இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இன்று காலை 7.30 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 28 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இந்த நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்று காலை முதல் பரிசல் இயக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் ஒகேனக்கல், காவிரி கரையோரம் உள்ள மக்கள் மீண்டும் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட உள்ளனர். ஏற்கனவே ஒகேனக்கல்லில் அரசு பள்ளியும், சமூக நலக்கூடமும் பொதுமக்கள் தங்குவதற்காக தயார் நிலையில் உள்ளது.

இன்று 29-வது நாளாக தொடர்ந்து ஒகேனக்கல் அருவி மற்றும் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடித்து வருகிறது.
Tags:    

Similar News