செய்திகள்
கேஎஸ் அழகிரி

தனியார் நிறுவனம் மூலம் மாணவர்கள் கல்வி கடனை மிரட்டி வசூலிப்பதா?- கே.எஸ்.அழகிரி கண்டனம்

Published On 2019-09-03 07:57 GMT   |   Update On 2019-09-03 07:57 GMT
தனியார் நிறுவனம் மூலம் மாணவர்கள் கல்வி கடனை மிரட்டி வசூலிப்பதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2004 இல் ஆட்சி அமைத்தவுடன் பல முற்போக்கு திட்டங்களை செயல்படுத்துவதில் தீவிரம் காட்டியது. விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன், மதிய உணவு திட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம், நூறு நாள் வேலை உறுதி திட்டம் போன்ற மக்கள் நலன் பயக்கும் திட்டங்களோடு ஏழை எளிய மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு வாய்ப்பு வழங்கும் வகையில் தொடங்கப்பட்டது தான் உயர்கல்வி கடன் திட்டம்.

இந்த திட்டத்தின்படி மருத்துவம், பொறியியல் படிப்பு படிக்க தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்குகிற திட்டத்தை அன்றைய மத்திய நிதியமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்கள் அறிமுகப்படுத்தினார். இத்திட்டம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 10 ஆண்டுகள் மிகச்சிறப்பாக செயல்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 2014 ஆம் ஆண்டில் கல்விக் கடன் பெற்றவர்களின் எண்ணிக்கை 24 லட்சம் பேர்.

தமிழகத்தில் 10 லட்சம் மாணவர்கள் கல்விக்கடனாக ரூபாய் 17 ஆயிரம் கோடி பெற்றிருக்கின்றனர். இதில் ரூபாய் 1875 கோடியை பாரத ஸ்டேட் வங்கி வாராக்கடன் என்று குறிப்பிட்டு ரூபாய் 847 கோடிக்கு ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விற்று விட்டது. இதில் ரூபாய் 381 கோடியை ரிலையன்ஸ் நிறுவனம் வசூலித்து பாரத ஸ்டேட் வங்கிக்கு திரும்ப வழங்க வேண்டும். மீதி தொகையை வசூல் கட்டணமாக ரிலையன்ஸ் நிறுவனம் எடுத்துக் கொள்கிற வகையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி வசூலாகிற பணத்தில் பாரத ஸ்டேட் வங்கிக்கு 55 சதவீதம், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 45 சதவீதம் என்று பிரித்துக் கொள்ளப்படும். இத்தகைய கொடூரமான ஒரு ஒப்பந்தத்தை பாரத ஸ்டேட் வங்கி ரிலையன்ஸ் நிறுவனத்துடன் செய்து கொள்வதற்கு மத்திய பா.ஜ.க. அரசின் நிதியமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் தேசிய வங்கிகளில் கல்விகடன் பெற்ற மாணவர்கள் கடுமையான மிரட்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் ஆளாகி வருகின்றனர்.

இந்த கடனை வசூலிக்கிற பொறுப்பை ரிலையன்ஸ் என்கிற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்து அவர்கள் மூலம் வசூலிப்பதை விட ஒரு மக்கள் விரோத நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது. மாணவர்கள் பெற்ற கல்விக்கடனை வசூலிப்பதற்காக ரிலையன்ஸ் நிறுவனம் நூற்றுக்கணக்கான அடியாட்களை நியமித்துள்ளது.

இப்படி நியமிக்கப்பட்டவர்கள் மாணவர்களிடமிருந்து கடனை வசூலிப்பதற்காக பல்வேறு விதமான அடக்குமுறைகளை ஏவிவிடுகின்றனர். இத்தகைய கொடிய அடக்கு முறையை தமிழ்நாடு காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது.

எனவே, சமூக நோக்கத்தின் அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட கல்விக்கடன் திட்டத்தை சீர்குலைக்கிற வகையில் தனியார் ரிலையன்ஸ் நிறுவனத்தோடு பாரத ஸ்டேட் வங்கி செய்து கொண்ட ஒப்பந்தத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தனியார் நிறுவனத்தின் மூலமாக கடன் பெற்ற மாணவர்கள் மீது ஏவி விடப்படுகிற அடக்கு முறையை உடனடியாக நிறுத்த வேண்டும்.

இனியும் இத்தகைய அடக்குமுறைகள் கல்விக் கடன் பெற்ற மாணவர்கள் மீது தொடர்ந்தால் பாரத ஸ்டேட் வங்கி முன்பாக விரைவில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News