செய்திகள்
ஜிகே வாசன்

சுங்க கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

Published On 2019-09-03 07:05 GMT   |   Update On 2019-09-03 07:05 GMT
தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ள 46 சுங்கச்சாவடிகளில் 21 சுங்கச்சாவடிகளின் வழியாக செல்லும் வாகனங்களுக்கு தற்போது சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கார், பேருந்து, கனரக வாகனம் போன்றவற்றிற்கு சுங்கக்கட்டணம் குறைந்த பட்சம் 5 ரூபாய் முதல் அதிக பட்சமாக 15 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகள் கடக்கும் விக்கிரவாண்டி, சேலம், நிலக்கோட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட மொத்தம் 21 சுங்கச்சாவடிகளில் மாற்றியமைக்கப்பட்ட கட்டணம் என்ற பெயரில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டிருப்பதால் வாகன ஓட்டிகள் பொருளாதார சுமைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்பது தான் வாகன ஓட்டிகளின் கோரிக்கை. சுங்கக்கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள், வாகன உரிமையாளர்கள், வியாபாரிகள், பொது மக்கள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவார்கள். காரணம் சுங்கக்கட்டணம் உயர்ந்தால் போக்குவரத்துக்கான செலவு கூடும், சரக்குக்கட்டணம் உயரும், விலைவாசி ஏறும் ஆகிய பொருளாதாரச் சுமை தான் பொது மக்கள் மீது திணிக்கப்படும்.

எனவே, மத்திய அரசு சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News