செய்திகள்
தர்மபுரியில் விநாயகர் சிலைக்கு முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஒருவர் ஆரத்தி எடுத்து வழிபாடு

தர்மபுரி-கிருஷ்ணகிரியில் விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்ற முஸ்லீம்கள்

Published On 2019-09-03 04:38 GMT   |   Update On 2019-09-03 07:35 GMT
தர்மபுரி, கிருஷ்ணகிரியில் விநாயகர் சதுர்த்தி விழாவில் முஸ்லீம்கள் பங்கேற்றது இந்து-முஸ்லீம் இடையே ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. தர்மபுரி மாவட்டம் முழுவதும் 902 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடைபெற்றது.

இதில் தர்மபுரி ராஜகோபால கவுண்டர் தெருவில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைக்கு முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த முகம்மது டெல்லி வாலா என்பவர் ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தியது அனைவருக்கும் ஆச்சரியத்தையும் மற்றும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

இதுகுறித்து முகமது டெல்லி வாலா கூறியதாவது:

இந்தியா முழுவதும் இந்துக்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் விழாக்களில் விநாயகர் சதுர்த்தியும் ஒன்றாகும். இந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் நான் கடந்த 16 வருடங்களாக கலந்து கொள்கிறேன். மேலும் இந்து-முஸ்லீம் இடையே ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் வெளிப்படுத்துவதால் மனதளவில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.



கிருஷ்ணகிரியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி முஸ்லீம்கள் பங்கேற்ற விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. இதையொட்டி கிருஷ்ணகிரி புதுப்பேட்டையில் உள்ள விநாயகர் தெருவில் விநாயகர் சிலை வைத்து பூஜைகள் நடந்தது. இதில் முன்னாள் கவுன்சிலர் அஸ்லம் தலைமையில் முஸ்லீம்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள் பூஜைக்கு தேவையான பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான முஸ்லீம்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News