செய்திகள்
கோப்பு படம்

ஒரு வருடம் சம்பளம் கொடுக்காததால் கோவிலை பூட்டிய பூசாரி - விநாயகர் சதுர்த்தி நாளில் பரபரப்பு

Published On 2019-09-02 08:33 GMT   |   Update On 2019-09-02 08:33 GMT
பொன்னேரி அருகே ஒரு வருடம் சம்பளம் வழங்காததால் பூசாரி ஒருவர் கோவிலை பூட்டிசென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை:

பொன்னேரியை அடுத்த ஏலியம்பேடு கிராமத்தில் வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. இங்கு அதே பகுதியை சேர்ந்த ராஜகோபால் என்பவர் பூசாரியாக உள்ளார்.

அவருக்கு கிராம மக்கள் சார்பில் மாதம் ரூ.2 ஆயிரத்து 500 ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஒரு வருடமாக அவருக்கு சம்பள பணம் கொடுக்கவில்லை.

மேலும் பூஜைக்கு தேவையான பொருட்களையும் கோவில் நிர்வாகிகள் சரிவர வழங்கவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து பூசாரி ராஜகோபால் கோவில் நிர்வாகிகளிடமும், கிராம மக்களிடமும் தெரிவித்தார். மேலும் தனக்கு தரவேண்டிய ஒரு வருட சம்பள பணத்தையும்கேட்டு வற்புறுத்தி வந்தார்.

இதனை கிராமமக்களும், கோவில் நிர்வாகிகளும் கண்டு கொள்ளவில்லை. இதனால் பூசாரி ராஜகோபால் மிகுந்த மன வேதனையில் இருந்தார்.

இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி இன்று காலை கோவிலில் சிறப்பு பூஜை செய்ய ஏற்பாடு செய்யும்படி பூசாரி ராஜ கோபாலிடம் தெரிவித்து இருந்தனர்.

ஏற்கனவே சம்பள பணமும், பூஜை பொருட்களும் கொடுக்காததால் ஆத்திரத்தில் இருந்த ராஜகோபால் நேற்று காலை பூஜை செய்ய மறுத்து கோவிலை இழுத்து மூடி சென்றுவிட்டார். மேலும் கோவில் வாசலில் உள்ள இரும்பு கேட்டில் ஒரு அறிவிப்பு பலகையையும் தொங்கவிட்டு இருந்தார்.

அதில் ‘ஒரு வருடம் சம்பளம் இல்லை, பூஜை பொருட்களும் இல்லை. அதனால் மன வேதனையுடன் 1.9.2019 முதல் பூஜை இல்லை. ஐயர்’ என்று எழுதி வைத்து இருந்தார்.

கோவிலுக்கு வந்த கிராம மக்கள் கோவில் பூட்டப்பட்டு இருப்பதையும், பூசாரியின் அறிவிப்பையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அறிந்ததும் கிராமமக்கள் ஏராளமானோர் கோவிலில் திரண்டனர். விநாயகர் சதுர்த்தி நாளில் கோவிலை திறந்து பூஜை நடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் கோவில் பூசாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். சம்பளம் வழங்காததால் பூசாரி ஒருவர் கோவிலை பூட்டிசென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News