செய்திகள்
ஜக்கி வாசுதேவ்

காவிரியை மீட்பதற்காக ஜக்கி வாசுதேவ் மோட்டார் சைக்கிள் பயணம்

Published On 2019-08-31 06:08 GMT   |   Update On 2019-08-31 06:08 GMT
காவிரியை மீட்பதற்காக ஜக்கி வாசுதேவ் அடுத்த மாதம் 3-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை தலைகாவிரியில் இருந்து திருவாரூர் வரை மோட்டார் சைக்கிள் பயணம் செல்ல இருக்கிறார்.
சென்னை:

‘ஈஷா’ வேளாண் காடுகள் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

‘நதிகளை மீட்போம்’ இயக்கத்தின் 2-வது களப்பணியாக தென்னிந்தியாவின் உயிர் நாடியான காவிரியை மீட்பதற்காகவும், அதை சார்ந்துள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் ‘காவிரி கூக்குரல்’ என்ற இயக்கத்தை ‘ஈஷா’ அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் கடந்த மாதம் தொடங்கி வைத்தார். இந்த இயக்கம் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் காவிரி வடிநில பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயித்துள்ளது.

முதல் கட்டமாக அடுத்த 4 ஆண்டுகளில் 73 கோடி மரங்கள் நட திட்டமிடப்பட்டுள்ளது. வேளாண் காடு வளர்ப்பின் மூலம் மரப்பயிர் விவசாயத்துக்கு மாறும் சராசரி விவசாயிகளின் வருமானம் 5 முதல் 7 ஆண்டுகளில் 3 முதல் 8 மடங்கு அதிகரிக்கும். இந்த திட்டத்தை சரியாக செயல்படுத்தும்போது விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படுவதோடு மட்டுமல்லாமல், மண் வளம் மற்றும் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்து காவிரி நதியில் நிலைத்த நீரோட்டத்தை ஏற்படுத்தும்.

‘காவிரி கூக்குரல்’ திட்டம் தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ள ஆயிரக்கணக்கான கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதற்கு ஏராளமான விவசாயிகள் தங்கள் நிலங்களில் மரப்பயிர் வளர்ப்பதற்கு விருப்பம் தெரிவித்து விண்ணப்ப படிவங்களை கொடுத்துள்ளனர். மேலும் இந்த இயக்கத்துக்கு திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக தமிழக, கர்நாடக மாநில அரசுகள் மற்றும் விவசாயிகளின் பங்களிப்பை அதிகரித்து, காவிரியை மீட்பதற்காக சத்குரு ஜக்கி வாசுதேவ் காவிரியின் பிறப்பிடமான தலைகாவிரியில் தொடங்கி திருவாரூர் வரை 1,200 கி.மீ. தூரத்துக்கு மோட்டார் சைக்கிளில் பயணம் சென்று விவசாயிகளை சந்திக்க உள்ளார். அடுத்த மாதம் 3-ந்தேதி தொடங்கி 15-ந்தேதி வரையிலும் இந்த பயணம் நடைபெற உள்ளது.

குடகு, பெங்களூரு, மைசூரு, மாண்டியா, ஓசூர், தர்மபுரி, மேட்டூர், ஈரோடு, திருச்சி, தஞ்சை, சிதம்பரம், திருவாரூர் உள்பட 30 இடங்களில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளும் சிறப்பு கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. இதில் அரசியல் கட்சி தலைவர்கள், விவசாய சங்க தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். இந்த பயணத்தின் நிறைவுதின நிகழ்ச்சி சென்னையில் நடைபெற உள்ளது.

ஜக்கி வாசுதேவ் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கிய நதிகள் மீட்பு இயக்கத்துக்கு 16.2 கோடி மக்கள் ஆதரவு அளித்தனர். இந்த இயக்கம் அளித்த நதிகளை புத்துயிரூட்டுவதற்கான வரைவு திட்ட அறிக்கையை ஆய்வுக்கு பிறகு ஏற்றுக்கொண்ட நிதி ஆயோக் அமைப்பு, அதை செயல்படுத்தவேண்டும் என்று மாநிலங்களுக்கு பரிந்துரை செய்தது. இதையடுத்து மகாராஷ்டிரா, கர்நாடகா, அசாம், குஜராத், சத்தீஸ்கர், பஞ்சாப் ஆகிய 6 மாநிலங்கள் ‘ஈஷா’வுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

முதல் கட்டமாக மகாராஷ்டிரத்தில் தேசிய அளவில் விவசாயிகள் அதிக அளவில் தற்கொலை செய்துகொள்ளும் யவத்மால் மாவட்டத்தில் உள்ள வஹாரி நதியை புத்துயிரூட்டுவதற்கான களப்பணியை அந்த மாநில அரசுடன் சேர்ந்து ‘ஈஷா’ செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது காஞ்சிபுரம் மாவட்ட கரிம விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் அரியானூர் ஜெயசந்திரன், தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேட்டவலம் மணிகண்டன், முன்னோடி மரப்பயிர் விவசாயி தெய்வசிகாமணி ஆகியோர் உடன் இருந்தனர். அவர்கள் தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.
Tags:    

Similar News