செய்திகள்
கேஎஸ் அழகிரி

அதிகாரங்களை ஒப்படைக்காமல் முதல்வர் மரபுகளை மீறியுள்ளார்- கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

Published On 2019-08-30 12:53 GMT   |   Update On 2019-08-30 12:53 GMT
அதிகாரங்களை ஒப்படைக்காமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரபுகளை மீறியுள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.

கரூர்:

கரூரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மோடி அரசின் கடுமையான நிதி நெருக்கடியால் நாடு முழுவதும் தொழில்கள் முடங்கியுள்ளது. பொருளாதார சுனாமி போல் உள்ளது. இதை மூடி மறைக்க பல்வேறு வித்தைகளை மோடி காட்டி வருகிறார். இந்தியாவில் உள்ள ஏற்றுமதி நகரங்களில் கரூர் 5-ம் இடத்தில் உள்ளது. இங்கு ஜவுளி உற்பத்தி, பஸ் கூண்டு கட்டுதல் போன்ற தொழில்கள் மோடியின் மோட்டார் வாகன சட்டத்தால் நலிவடைந்து விட்டது.

ஜி.எஸ்.டி. வரியால் டெக்ஸ்டைல் தொழில் தேய்ந்து விட்டது. கண்ணுக்கு எதிராகவே பொருளாதாரம் அழிந்து கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. தமிழகத்தின் மிகப்பெரிய ஆட்டோ மொபைல் தொழிலில் 50 சதவீதம் உற்பத்தி குறைந்து விட்டது. 3½ லட்சம் ஆட்டோ மொபைல் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.

அன்றாடச் செலவுக்கு மத்திய அரசிடம் பணம் இல்லை. இதனால்தான் ரிசர்வ் வங்கியின் உபரிநிதியான ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை சட்டத்திற்கு புறம்பாக, மரபுகளை மீறி அந்த பணத்தை பெற்றிருக்கிறார்கள். ரிசர்வ் வங்கியின் உபரிநிதியை யுத்தம், பஞ்சம் வந்தால்தான் பயன்படுத்த வேண்டும். இதைவிட அபாய எச்சரிக்கை எதுவும் இருக்க முடியாது. மத்திய அரசு இதை காதில் வாங்காமல் செயல்படுகிறது. மாநில அரசு இதைப்பற்றி கவலைப் படுவதே கிடையாது.

இந்தியாவில் மாணவர்களுக்கு கல்விக்கடன், அகல ரெயில் பாதை உள்ளிட்ட பல்வேறு திட்டத்திற்கு நிதியுதவி வாங்கிக் கொடுத்தது ப.சிதம்பரத்தின் பெரிய சாதனை. நிதியமைச்சகத்தின் ஒப்புதல் இன்றி இந்த திட்டங்கள் கிடைத்திருக்காது. ப. சிதம்பரம் கைது தொடர்பாக பிரேமலதா விஜயகாந்த், உப் புத்தின்றவன் தண்ணீரை குடிக்கத்தான் வேண்டும் என கூறியதாக சொல்கிறீர்கள். ப.சிதம்பரம் உப்பைத் திங்க வில்லை. ஆகவே அவர் தண்ணீர் குடிக்க வேண்டிய அவசியம் இல்லை.

முதல்-அமைச்சர் வெளிநாடு செல்வதை குறை கூற வில்லை. ஆனால் தமிழக காங்கிரசின் கேள்வி என்ன வென்றால் இருமுறை அன்னிய முதலீட்டு மாநாடுகள் நடத்தினர். இதில் எவ்வளவு முதலீடு வந்தது, எவ்வளவு தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டன, எவ்வளவு தொழிற்சாலைகள் பரிசீலனையில் உள்ளன, அதன் கோப்புகள் எவ்வளவு நாள் பரிசீலனையில் உள்ளது என்பதை வெள்ளை அறிக்கையாக தமிழக அரசு வெளியிட வேண்டும்.

அந்நிய முதலீடு பெற வெளிநாடுகளுக்கு சென்றுள்ள முதல்-அமைச்சர் மரபுகளை மீறியுள்ளார். இங்கு இருந்தாலே இங்குள்ள பணிகளை கவனிக்க ஒருநாள் முதல்வருக்கு போதாது. இந்த நிலையில் வெளிநாடு செல்லும்போது இங்குள்ளவர்களிடம் வேலையை பகிர்ந்து அளித்திருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாவட்ட தலைவர் சின்னசாமி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் கே.சுப்பிரமணியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர்.ஸ்டீபன்பாபு மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News