செய்திகள்
சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் தாக்கப்பட்ட காட்சி.

பாரதிய ஜனதாவினர் என்னை கொல்ல முயற்சி- சேலம் சமூக ஆர்வலர் பேட்டி

Published On 2019-08-29 07:28 GMT   |   Update On 2019-08-29 07:28 GMT
மத்திய அரசின் திட்டங்கள் குறித்து கேட்டதால் பாரதிய ஜனதாவினர் என்னை கொல்ல முயற்சித்தார்கள் என்று ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெறும் சேலம் சமூக ஆர்வலர் பியூஸ்மானுஷ் தெரிவித்துள்ளார்.

சேலம்:

சேலம் ஏற்காடு அடிவாரம் பகுதியைச் சேர்ந்தவர் பியூஸ்மானுஷ். இவர் மத்திய அரசின் திட்டங்களை சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்ததால் இவருக்கும் பாரதிய ஜனதாவை சேர்ந்தவர்களுக்கும் ஏற்கனவே கருத்து மோதல் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று பா.ஜனதா அரசின் பொருளாதார சீர்திருத்தம் மற்றும் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்து தனது பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை பியூஸ் மானுஷ் வெளியிட்டார். மேலும் சேலத்தில் உள்ள பாரதிய ஜனதா அலுவலகத்திற்கு சென்று இதுகுறித்து கேள்வி எழுப்ப உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

அதன்படி நேற்று மாலை சேலம் மரவனேரியில் உள்ள பாரதிய ஜனதா அலுவலகத்திற்கு தனியாக சென்றார். பின்னர் தனது பேஸ்புக்கில் உள்ள நேரலையை ஆன் செய்த அவர் அங்கிருந்த பா.ஜனதா நிர்வாகிகளிடம் பொருளாதார சீர்குலைவுக்கு காரணம் என்ன? மத்திய அரசு மக்களுக்கு என்னென்ன நல்ல திட்டங்களை செய்துள்ளது என்று கேள்வி எழுப்பினார்.

அப்போது பாரதிய ஜனதாவினருக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த பாரதிய ஜனதாவினர் பியஸ்மானூஷை சரமாரியாக தாக்கினர். இதில் நிலைகுலைந்த அவர் கீழே விழுந்தார். இதைப் பார்த்த போலீசார் அவர்களை தடுத்தனர். ஆனாலும் ஆவேசம் அடைந்த பாரதிய ஜனதாவினர் போலீசாரின் கண்முன்பே மீண்டும் தாக்கினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. இதையத்து அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் அவர்களை சமாதானப்படுத்தினார். தொடர்ந்து பியூஸ்மானுஷை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே பாரதிய ஜனதா மாநகர் மாவட்ட தலைவர் கோபிநாத் போலீஸ் கமி‌ஷனர் செந்தில்குமாரிடம் புகார் கொடுத்தார். அதில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை பியூஸ்மானுஷ் தரக்குறைவாக திட்டியதுடன் பாரதிய ஜனதா அலுவலகத்திற்குள் அத்துமீறி மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக பேசினார்.

மேலும் அங்கிருந்த நிர்வாகிகளை தாக்கிய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. அதன்பேரில் பியூஸ்மானுஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பியூஸ்மானுஷ் கொடுத்த புகாரில் பா.ஜனதா நிர்வாகிகள் சிலர் மீதும் அஸ்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே பாரதிய ஜனதாவினர் தாக்கியதில் காயம் அடைந்ததாக கூறி பியூஸ்மானுஷ் நேற்று இரவு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மேலும் பாரதிய ஜனதாவுக்கு எதிராக அவதூறு பரப்பும் பியூஸ்மானுஷ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கமி‌ஷனர் செந்தில்குமாரை சந்தித்து இன்றும் முறையிட பாரதிய ஜனதாவினர் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் பியூஸ்மானுஷ் கூறியதாவது:-

பாரதிய ஜனதாவினர் தொடர்ந்து எனக்கு சமூக வலைதளங்கள் மூலமாக மிரட்டல் விடுத்து வந்தனர். பெண்கள் பற்றி அவதூறு தகவல்களையும் பரப்பி வருகிறார்கள். இதுவரை எந்த கட்சியினரும் இதுபோல் செய்ததில்லை.

பொருளாதார சீர் திருத்தம் மற்றும் காஷ்மீர் விவகாரம் குறித்து கேட்க நான் பாரதிய ஜனதா அலுவலகத்திற்கு தனியாக சென்றேன். அப்போது இதுகுறித்து ஏற்கனவே சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்ததால் அவர்கள் தயாராக இருந்துள்ளனர்.

நான் சென்று மத்திய அரசு திட்டங்கள் குறித்து கேட்ட உடனேயே தகாத வார்த்தைகளால் என்னை திட்டினர். மேலும் செருப்பு மாலை அணிவித்ததுடன் என்னை சரமாரியாக தாக்கி கொல்ல முயன்றனர். இதனால் நான் கதறியபோதும் என்னை விடாமல் மாறி மாறி தாக்கினர்.

மாவட்ட தலைவர் கோபிநாத் முன்னிலையிலேயே இந்த கொடூர தாக்குதல் சம்பவம் நடந்தது. இதில் எனக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறேன்.

போலீசார் எனக்கு பாதுகாப்பு அளிப்பதுடன் இந்த சம்பவம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

Tags:    

Similar News