செய்திகள்
கைதான ரமேஷ்- அடித்து கொலை செய்யப்பட்ட சாந்தி.

முதல் மனைவியை அடித்து கொன்ற இறைச்சி கடைக்காரர் கைது

Published On 2019-08-28 05:40 GMT   |   Update On 2019-08-28 05:40 GMT
குடியை மறக்க மாத்திரை கொடுத்த முதல் மனைவியை அடித்து கொன்ற இறைச்சி கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
கோவை:

திருப்பூர் ஏ.பி.டி. ரோடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (35). இவர் காலேஜ் ரோட்டில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி பெயர் சாந்தி. 2-வது மனைவி திலகவதி.

இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் தான் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ரமேசுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. தினமும் குடித்து விட்டு வந்து 2 மனைவிகளிடமும் தகராறு செய்து வந்தார். அடித்து துன்புறுத்தினார்.

இதனால் 2 மனைவிகளும் அவதி அடைந்தனர். அவர்கள் கணவரை திருத்த முயற்சி செய்தனர். குடிப்பழக்கத்தில் இருந்து கணவரை திருத்த குடியை மறக்க பயன்படுத்தப்படும் மாத்திரையை வாங்கி ரமேசுக்கு கொடுத்தனர்.

சற்று நேரத்தில் அவர் மயங்கினார். அவருக்கு மனைவிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. எனக்கு என்ன கொடுத்தீர்கள்? என இருவரிடமும் கேட்டார். அப்போது அவர்கள் குடியை மறக்க மாத்திரை கொடுத்ததாக கூறினார்கள்.

இதனால் ரமேஷ் ஆத்திரம் அடைந்தார். அங்கிருந்த உருட்டுக்கட்டையை எடுத்து 2 மனைவிகளையும் சரமாரியாக அடித்து உதைத்தார். இதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இதில் முதல் மனைவி சாந்தி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

2-வது மனைவி திலகவதி பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினார். அவர் சத்தம் போட்டார். இதனை கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர்.

இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய திலகவதியை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொலை செய்யப்பட்ட சாந்தி உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் முதல் மனைவியை கொன்ற ரமேஷ் திருப்பூர் வடக்கு போலீசில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் ரமேஷ் கொடுத்த வாக்கு மூலத்தில் குடியை மறக்க மாத்திரை கொடுத்ததால் எனக்கு மயக்கம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த நான் 2 மனைவிகளையும் அடித்தேன். அதில் முதல் மனைவி சாந்தி இறந்து விட்டார் என தெரிவித்து உள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News