செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

பாசனத்துக்காக வைகை-பெரியார் அணைகள் 29ந்தேதி திறப்பு: முதலமைச்சர் உத்தரவு

Published On 2019-08-27 07:45 GMT   |   Update On 2019-08-27 07:45 GMT
பாசனத்துக்காக வைகை மற்றும் பெரியாறு அணைகளில் இருந்து வருகிற 29-ந்தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போக சாகுபடிக்காக பெரியார் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடிமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

அதை ஏற்று, தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போக சாகுபடிக்கும், தேனி மாவட்ட குடிநீர் தேவைக்காகவும் பெரியார் அணையிலிருந்து மொத்தம் விநாடிக்கு 300 கன அடி வீதம் 29.8.2019 முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்.

இதனால் தேனி மாவட்டத்தில் உள்ள தேனி, உத்தமபாளையம் மற்றும் போடிநாயக்கனூர் வட்டங்களிலுள்ள 14,707 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதே போல தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பெரியாறு பிரதானக் கால்வாய் பாசனப் பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசன பகுதியில் முதல் போக பாசன பரப்பான 45041 ஏக்கர் நிலங்களுக்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட விவசாய பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

அதை ஏற்று, தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பெரியாறு பிரதானக் கால்வாய் பாசனப் பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசன பகுதியில் முதல் போக பாசன பரப்பான 45041 ஏக்கர் நிலங்களுக்கு, நாள் ஒன்றுக்கு 900 கனஅடி வீதம், 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறைவைத்தும், மொத்தம் 120 நாட்களுக்கு 6739 மில்லியன் கனஅடி தண்ணீரினை நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து 29.8.2019 முதல் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால் திண்டுக்கல் மாவட்டம் மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள 45041 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் பழனிசாமி கூறி உள்ளார்.
Tags:    

Similar News