செய்திகள்
போராட்டத்தில் இளங்கோவன் பேசிய காட்சி.

ப.சிதம்பரம் கைதுக்கு கண்டனம்- இளங்கோவன் தலைமையில் காங்கிரசார் போராட்டம்

Published On 2019-08-26 10:24 GMT   |   Update On 2019-08-26 10:24 GMT
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே காங்கிரஸ் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னை:

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே காங்கிரஸ் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு தலைவர் ரஞ்சன்குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது ‘‘பழி வாங்காதே... பழிவாங்காதே... மோடி அரசே பழிவாங்காதே..., விடுதலை செய் விடுதலை செய்.. சிதம்பரத்தை விடுதலை செய்’’ என்பது உள்ளிட்ட பல்வேறு கோ‌ஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதாவது:-

இந்தியாவில் ஜனநாயகம் கொல்லப்பட்டு உள்ளது. பொருளாதாரம் நசுக்கப்பட்டு இருக்கிறது. காஷ்மீர் மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் உலகம் முழுவதும் பொருளாதாரம் சரிந்த நிலையிலும் இந்தியாவில் பொருளாதாரத்தை நிலை நிறுத்தியது காங்கிரஸ் அரசு.

ஆனால் இன்றைய நிலை எப்படி இருக்கிறது. பொருளாதாரத்தில் இந்தியா அதள பாதாளத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. நாடு எப்போது திவால் ஆகுமோ என்ற பயம் மக்களை சூழ்ந்துள்ளது.

காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. அங்குள்ள மக்கள் போன் பேச முடியவில்லை. வங்கிகளில் பணம் எடுக்க முடியவில்லை. ஆஸ்பத்திரிகளுக்கு கூட செல்ல முடியவில்லை. அங்கு சர்வாதிகாரம் தலைவிரித்தாடுகிறது.

பொருளாதார சரிவால் பல நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. லட்சக்கணக்கானவர்கள் வேலை வாய்ப்பை இழந்து வருகிறார்கள்.

இதையெல்லாம் மிக சாமர்த்தியமாக திசை திருப்புவதற்காக சிதம்பரம் கைது நடவடிக்கையை கையில் எடுத்து உள்ளனர். இது காங்கிரஸ் கட்சியை அசிங்கப்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை இதற்கெல்லாம் பயப்பட போவதில்லை.

சுதந்திரம் வாங்கவும், வாங்கிய சுதந்திரத்தை 50 ஆண்டுகளாக கட்டிக்காப்பாத்தவும் பல தலைவர்களை காங்கிரஸ் தியாகம் செய்துள்ளது.

அப்படிப்பட்ட காங்கிரசுக்கு இந்தியாவை காப்பாற்றும் கடமை உண்டு. அதை செய்வோம், நடுராத்திரியில் சுவர் ஏறிக் குதித்து கைது செய்யும் அளவுக்கு சிதம்பரம் என்ன பயங்கரவாதியா?

உங்களுக்கு வெட்கம் இல்லையா? விஜய் மல்லையாவையும், நிரவ் மோடியையும் வெளிநாட்டுக்கு அனுப்பி விட்டு சிதம்பரம் வெளிநாட்டுக்கு சென்று விடக்கூடாது என்று ‘லுக்அவுட்’ நோட்டீஸ் கொடுக்கிறீர்கள். உங்களுக்கு மனசாட்சி இல்லையா?

தொடர்ந்து இதுபோல் செயல்பட்டால் மோடி வெளிநாட்டில் சுற்றுப்பயணம் செய்ய முடியாது. அங்கு தான் குடியேற வேண்டும்.

காஷ்மீர் மக்கள் கொந்தளித்து போய் இருக்கிறார்கள். அவர்களை அடக்க முடியாது. அங்குள்ள நிலைமை விரைவில் வெளியில் வரும்.

சிதம்பரத்தை சட்ட ரீதியாக சந்திக்க மத்திய அரசு பயப்படுகிறது. ஆனால் இதனை சிதம்பரம் சட்ட ரீதியாக சந்திப்பார்.

நீதித்துறை பா.ஜ.க. அரசுக்கு அடிமையாக இருப்பதாகவும், மோடி-அமித்ஷா சொல்வதை செய்வதாகவும் மக்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இது நல்லது அல்ல. சட்டப்படி நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாநில தலைவர் கிருஷ்ணசாமி, மலேசியா பாண்டியன் எம்.எல்.ஏ., அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஹசினாசையத், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கோபண்ணா, ராயபுரம் மனோகர், கீழானூர் ராஜேந்திரன், தாமோதரன், பொன்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.கே. நவாஸ், சிவராமன்.

மாவட்ட தலைவர்கள் சிவராஜசேகரன், வீரபாண்டியன், ஏ.ஜி.சிதம்பரம் மற்றும் சூளை ராஜேந்திரன், முனிவேல், முத்தழகன், திருவான்மியூர் மனோகரன், அகரம் கோபி, சுகுமார்தாஸ், மணிப்பால், பாலமுருகன், எஸ்.எம்.குமார், சசிக்குமார், நிலவன், கிஷோர்குமார், மாணவர் காங்கிரஸ் யஸ்வந்த் சாகர், எழும்பூர் தினே‌ஷ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News