செய்திகள்
விபத்துக்குள்ளான பஸ்

அன்னூர் அருகே அரசு பஸ் கவிழ்ந்து 10 பயணிகள் படுகாயம்

Published On 2019-08-26 04:28 GMT   |   Update On 2019-08-26 04:28 GMT
அன்னூர் அருகே இன்று காலை அரசு பஸ் கவிழ்ந்து 10 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
அன்னூர்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கோவைக்கு இன்று காலை அரசு பஸ் புறப்பட்டு வந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். பஸ்சை டிரைவர் செந்தில் குமார் ஓட்டி வந்தார். கண்டக்டராக முனியப்பன் இருந்தார்.

இந்த பஸ் இன்று காலை 8 மணியளவில் அன்னூர் பஸ் நிலையம் வந்தது. அங்கு பயணிகளை ஏற்றி கொண்டு கோவை புறப்பட்டது. அன்னூர் அருகே உள்ள மைல்கல் பகுதியில் பஸ் வந்த போது முன்னால் ஓரைக்கால் பாளையத்தை சேர்ந்த கருப்பசாமி (35) மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அவர் திடீரென ரோட்டில் வலது பக்கம் மோட்டார் சைக்கிளை திருப்பினார். அவர் மீது மோதாமல் இருக்க அரசு பஸ் டிரைவர் செந்தில் குமார் திடீரென பிரேக் போட்டார். ஆனாலும் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியது.

அதன் பின்னரும் கட்டுக்குள் வரவில்லை. ரோடு ஓரம் இருந்த 5 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த 10 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

அவர்களில் சத்தியமங்கலம் அரியப்பம்பாளையம் ராமசாமி (40), காசிபாளையம் பத்மாவதி (50), பொகலூர் செந்தில் குமார் (45), பொள்ளாச்சி சுதா (27) ஆகியோர் அன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மற்றவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பஸ் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற கருப்பசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் அன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

விபத்து குறித்து அன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்து காரணமாக கோவை-அன்னூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News