செய்திகள்
கேஎஸ் அழகிரி

மோடிக்கு ஆதரவாக பேசுவதா?- ஜெய்ராம் ரமேஷ் கருத்துக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்

Published On 2019-08-24 10:44 GMT   |   Update On 2019-08-24 10:44 GMT
நரேந்திர மோடியை எதிர்ப்பது காங்கிரஸ் கட்சிக்கு பயன் தராது என்று பேசிய ஜெய்ராம் ரமேஷுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை:

காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

2014 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தலில், பா.ஜ.க. ஆட்சியின் சாதனைகளை சொல்லி வாக்குகளை பெறாமல் மதரீதியாக மக்களை திசை திருப்பி வாக்குகளை பெற்று ஆட்சி அமைத்தவர் நரேந்திர மோடி. பா.ஜ.க.வின் சித்தாந்தமும், காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தமும் அடிப்படையில் முற்றிலும் வேறுபட்டவை.

நரேந்திர மோடியை எதிர்ப்பது காங்கிரஸ் கட்சிக்கு பயன் தராது என்று அரசு அதிகாரிகளாக இருந்து, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, மத்திய அமைச்சர்களாக பதவிகளை அனுபவித்த ஜெய்ராம் ரமேஷ் போன்றவர்கள் கருத்து கூறியிருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது.

கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையில் இத்தகைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டுமென்று தோன்றியிருந்தால் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரிடம் தெரிவித்திருக்கலாம். பொது வெளியில் இக்கருத்துக்களை சொல்வது போர்க்களத்தில் பா.ஜனதாவை எதிர்த்து போராடுகிற காங்கிரஸ் தொண்டர்களின் மன உறுதியை சீர்குலைத்துவிடும்.

நரேந்திர மோடி ஆட்சியில் பல்வேறு பொய் வழக்குகளை காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து வருகிறார்கள். நேரு தொடங்கிய நே‌ஷனல் ஹெரால்ட் பத்திரிகையை அபகரிப்பதற்கு சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் மீது வழக்கு தொடுத்திருக்கிறார்கள்.

மத்திய பா.ஜ.க. அரசை கடுமையாக விமர்சித்ததற்காக முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்நேரத்தில் இத்தகைய வி‌ஷமத்தனமான கருத்துக்களை ஜெய்ராம் ரமேஷ் போன்றவர்கள் கூறுவது, அதை இன்னும் சிலர் ஆமோதிப்பது இதைவிட காங்கிரஸ் கட்சிக்கு செய்கிற பச்சை துரோகம் வேறு எதுவும் இருக்க முடியாது.

நரேந்திர மோடியைப் புகழ்வதற்கு பா.ஜ.க.வில் நிறைய தலைவர்கள் இருக்கிறார்கள். அந்த வேலையை இவர்கள் செய்வதற்கு ஏதோ ஒரு உள்நோக்கம் இருக்கிறது. நரேந்திர மோடியை துதிபாடி பிழைக்க வேண்டும் என்று இவர்கள் நினைத்தால், நாகரீகமாக உடனடியாக காங்கிரஸ் கட்சியிலிருந்து இவர்கள் வெளியேறுவது நல்லது.

இத்தகைய குழப்பவாதிகளை காங்கிரஸ் தலைமை உடனடியாக அடையாளம் கண்டு விரைந்து உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News