செய்திகள்
வைகோ

ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டங்களை கைவிட வேண்டும்- வைகோ அறிக்கை

Published On 2019-08-24 07:42 GMT   |   Update On 2019-08-24 07:42 GMT
ரெயில்வே துறையைத் தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

2014-ல் பாரதிய ஜனதா அரசு பொறுப்பு ஏற்றது முதல், ரெயில்வே துறையைத் தனியார் மயமாக்கத் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பிபேக் தேப் ராய் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, ரெயில்வே துறையை முழுமையாகத் தனியார் துறைக்கு தாரை வார்த்திடுவதற்கான பரிந்துரைகளை மத்திய அரசிடம் அளித்து இருக்கின்றது.

ஆனாலும், ரெயில்வே துறை தனியார் மயம் ஆகாது என்று ரெயில்வே அமைச்சர்கள் சுரேஷ் பிரபு, பியூஷ்கோயல் கூறி வந்தனர்.

கடந்த மே மாதம் இரண்டாவது முறையாக பொறுப்பு ஏற்ற பின்பு, ‘100 நாள் செயல் திட்டம்’ என்ற பெயரில், ரெயில்வே உள்ளிட்ட பல பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க பா.ஜ.க. அரசு விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

நெரிசல் இல்லா வழித்தடங்களிலும், சுற்றுலா தலங்கள் அமைந்துள்ள வழித் தடங்களிலும், தங்க நாற்கரப்பாதை எனப்படும் சென்னை-மும்பை, மும்பை- டெல்லி, டெல்லி- அவுரா, அவுரா-சென்னை வழித்தடங்களிலும், தனியார் நிறுவனங்கள் ரெயில்களை இயக்குவதற்கு உரிமம் அளிக்கின்ற திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ராஜதானி, சதாப்தி உள்ளிட்ட பிரிமியம் கட்டண ரெயில்களைத் தனியார் இயக்குவதற்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரவும் மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. இதற்கு, பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஏற்கனவே ரெயில்வேத் துறைக்கு சொந்தமான அச்சகங்கள் மூடப்பட்டு உள்ளன. பயணச் சீட்டு வழங்குவதையும், ரெயில் பெட்டி தயாரிப்பு, ரெயில் இயந்திரம் மற்றும் சக்கரங்கள் தயாரிக்கும் ஏழு உற்பத்தி ஆலைகளையும், ரெயில்வே துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துகளையும் தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்க ரெயில்வே துறை முனைந்துள்ளது.

இந்நிலையில், ரெயில்வே துறை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதாகக் காரணம் கூறி, ஐ.ஆர்.சி.டி.சி.யின் பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்ய நேற்று முன்தினம் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. புதிய பங்கு வெளியீட்டிற்கு அனுமதி கோரி இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடம் மத்திய அரசு விண்ணப்பித்துள்ளது. ரூபாய் 10 முகமதிப்பு கொண்ட இரண்டு கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன. இதன் மூலம் ரூபாய் 600 கோடி வரை திரட்டுவதற்கு ரெயில்வே துறை முடிவு எடுத்து இருக்கின்றது.

ரெயில்வே துறையைப் புதுப்பிக்க, 2030-ம் ஆண்டுக்குள் சுமார் 50 லட்சம் கோடி முதலீடு தேவைப்படுகின்றது; ஆனால் ஆண்டுக்கு 1.6 லட்சம் கோடி மூலதனம் இடும் சக்தி மட்டுமே ரெயில்வே துறையிடம் இருப்பதால், தனியார் மூலதனம் தேவை என்று பா.ஜ.க. அரசு தனியார் மயத்தை நியாயப்படுத்துகின்றது.

நடப்பு நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரெயில்வே துறையைப் புதுப்பிக்கத் தேவையான நிதி, பொதுத்துறை தனியார் கூட்டின் மூலம் திரட்டப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சிகள், நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

பயணிகள் கட்டணம் உயர்த்தப்படும்; ஏழை எளிய மக்களுக்கு ரெயில் பயணம் என்பது எட்டா கனியாக ஆகிவிடும். சரக்குக் கட்டணங்கள் கடுமையாக உயரும்; அதனால், விலைவாசி உயரும். லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வேலை வாய்ப்புக்கு அச்சுறுத்தலாக அமையும்.

எனவே, முன்பு அமைச்சர்கள் அளித்த வாக்குறுதிகளைக் காப்பாற்றும் வகையில், ரெயில்வே துறையைத் தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகின்றேன்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
Tags:    

Similar News