செய்திகள்
பழனி முருகன் கோவிலில் ஸ்கேனர் கருவி மூலம் பக்தர்களின் உடைமைகள் சோதனை செய்யப்படுவதை படத்தில் காணலாம்.

பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி- திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் போலீஸ் கண்காணிப்பு

Published On 2019-08-24 04:31 GMT   |   Update On 2019-08-24 04:31 GMT
தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை கொடுத்த தகவல் எதிரொலியாக திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல்:

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை கொடுத்த தகவல் எதிரொலியாக திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவிலுக்கு செல்லும் பகுதிகளான படிப்பாதை, மின்இழுவை ரெயில் நிலையம் ஆகிய இடங்களில் மெட்டல் டிடெக்டர் கொண்டு ஆண், பெண் பக்தர்கள் என தனித்தனியாக தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

அதேபோல் அவர்கள் கொண்டு வரும் உடைமைகளை சோதனை செய்ய பிரத்யேக ஸ்கேனர் திண்டுக்கல்லில் இருந்து கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் பைகள், பேக்குள் ஆகியவை ஸ்கேன் செய்யப்படுகின்றன. இதற்கிடையே பழனி கோவிலின் பிரதான நுழைவு படிப்பாதை பகுதியில் பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன் வந்து ஆய்வு செய்தார்.

பழனி டிவிசனுக்கு உட்பட்ட சத்திரப்பட்டி, ஆயக்குடி, பாலசமுத்திரம், தொப்பம்பட்டி, சாமிநாதபுரம் உள்பட 7 இடங்களில் உள்ள சோதனை சாவடிகளில் அந்ததந்த சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் வாகனங்கள் சோதனை செய்யப்படுகின்றன.

இதேபோல் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில், வடமதுரை சவுந்தரராஜபெருமாள் கோவில், தேனி மாவட்டம் வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில், குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும், மக்கள் கூடும் பஸ்நிலையம், ரெயில்நிலையம் மார்க்கெட் உள்ளிட்ட இடங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதே போல கொடைக்கானல் மலைப்பகுதியிலும் பயங்கரவாத செயல்களில் தொடர்புடையவர்கள் நடமாட்டம் இருப்பதால் போலீசார் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது கிடைத்த தகவலையடுத்து தமிழக எல்லை பகுதியான போடி மெட்டு, கம்பம் மெட்டு, குமுளி ஆகிய பகுதிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகப்படும்படியாக வரும் வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் வைத்துள்ள பொருட்களையும் சோதனை செய்கின்றனர். திண்டுக்கல், பழனி ரெயில் நிலையங்களில் ரெயில்வே போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

இது தவிர தங்கும் விடுதிகளில் யாரேனும் வெளியூர் நபர்கள் சந்தேகப்படும்படி உள்ளனரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News