செய்திகள்
கைது

திருச்சி வங்கியில் ரூ.16 லட்சம் கொள்ளையடித்த வாலிபர் கைது

Published On 2019-08-24 04:25 GMT   |   Update On 2019-08-24 04:25 GMT
திருச்சி வங்கியில் ரூ.16 லட்சம் பணத்தை கொள்ளையடித்த வாலிபரை வாகன சோதனையின் போது போலீசார் கைது செய்தனர்.
திருச்சி:

திருச்சி சத்திரம்பஸ் நிலையம் அருகில் சிட்டி யூனியன் வங்கி உள்ளது. இங்கிருந்து திருச்சி மாவட்டத்தில் உள்ள வங்கியின் கிளை ஏ.டி.எம்.களுக்கு தினமும் பணம் எடுத்து செல்லப்பட்டு நிரப்பப்படுவது வழக்கம். இதை லோகி கியாஸ் ஏஜென்சி நிறுவனத்தின் ஊழியர்கள் மூலம் வங்கி நிர்வாகத்தினர் செய்து வந்தனர்.

இந்தநிலையில் கடந்த 21-ந்தேதி காலை இந்நிறுவன ஊழியர்களான திருச்சி அரியமங்கலம் அம்பிகாபுரத்தை சேர்ந்த அருண்(32), முசிறியை சேர்ந்த சரவணன் (38) ஆகியோர் வழக்கம்போல சிட்டி யூனியன் வங்கிக்கு சென்று ஏ.டி.எம். எந்திரங்களுக்கு பணத்தை கொண்டு செல்ல 2 பைகளில் ரூபாய்நோட்டு கட்டுகளை வங்கி கேஷியரிடமிருந்து பெற்று நிரப்பினர்.

முதலில் ஒரு பையில் ரூ.16 லட்சமும், 2வது ஒரு பையில் ரூ.18 லட்சமும் நிரப்பியுள்ளனர். இந்நிலையில் ரூ.16 லட்சம் பணம் இருந்த பை திடீரென்று அங்கிருந்து மாயமாகிவிட்டது. வங்கி கேஷ் கவுண்டர் முன்பு அருணிடமிருந்து ரூ.18 லட்சம் இருந்த பணப்பையை வாங்க சரவணன் எழுந்து சென்ற நேரத்தை பயன்படுத்தி அவர் அருகில் இருந்த வாலிபர் ரூ.16 லட்சம் பணப்பையை நைசாக எடுத்து கொண்டு அங்கிருந்து நழுவி சென்று விட்டார்.

இது குறித்து திருச்சி கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். வங்கிக்குள் இருந்த சி.சி.டி.வி. கேமிரா, வெளியில் வைக்கப்பட்டுள்ள கேமிராவில் பதிவான காட்சிகளை பார்த்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் கேமிராவில் பதிவான காட்சிகள் சரியாக தெரியாததால் திருடிச் சென்ற வாலிபரை பிடிக்க முடியாமல் திணறி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று பெரம்பலூர் மதன கோபாலபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முருகையா என்பவர் ஆட்டோவில் 40 வயது மதிக்கத்தக்க நபர் வாடகைக்கு ஆட்டோ வேண்டும் என்று கூறியுள்ளார். முருகையாவிடம் தனக்கு நல்ல லாட்ஜில் தங்க இடம் வாங்கி தரும்படியும் கேட்டுள்ளார். அதிக குடிபோதையில் இருந்த அந்த நபர் கையில் பெட்டி ஒன்றை இருக்கமாக பிடித்தப்படி இருந்துள்ளார். அந்த நபர் அதிக போதையில் இருந்ததால்,பெரம்பலூர் லாட்ஜ் ஊழியர்கள் தங்குவதற்கு இடம் கொடுக்கவில்லை.

இதனால் ஆட்டோவிலேயே பல இடங்களுக்கு சுற்றி உள்ளனர். ஒரு கட்டத்தில் அந்த நபர் ஆட்டோவிலேயே தூங்கி விட்டார். அவரை முருகையா பல முறை தட்டி எழுப்பியும், அவர் எழவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஆட்டோ டிரைவர் முருகையா அவர் வைத்திருந்த பெட்டியை திறந்து பார்த்தார்.

அதில் கட்டு, கட்டாக பணம் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். நேற்று தமிழகத்தில் பயங்கரவாதிகள் 6 பேர் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை போலீசாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து தமிழகம் முழுவதும் நேற்று இரவு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டிருந்தனர். திருச்சி, பெரம்பலூரிலும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

பெரம்பலூரில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்த போது ஆட்டோ டிரைவர் முருகையா, தனது ஆட்டோவில் கட்டு கட்டாக பணத்துடன், ஒருவர் நீண்ட நேரமாக எழாமல் தூங்கி கொண்டிருப்பதாகவும் அவர் தங்க விடுதி கேட்டு தன்னை அழைத்து வந்ததாகவும் கூறி பணப்பெட்டியை ஒப்படைத்தார்.

போலீசார் அந்த நபரை எழுப்பி விசாரித்த போது அவர் தான் திருச்சி சிட்டி யூனியன் வங்கியில் ரூ.16 லட்சம் பணப்பையை திருடி சென்றவர் என்பது தெரிய வந்தது. அவர் பெயர் ஸ்டீபன் (வயது 40) என்பதும் திருச்சி பாலக்கரை அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவர் வைத்திருந்த பணப் பெட்டியில் வங்கியில் இருந்து திருடப்பட்ட ரூ.16 லட்சம் பணத்தில் செலவழித்தது போக மீதி ரூ. 15.70 லட்சம் இருந்தது. அதை கைப்பற்றிய போலீசார் ஸ்டீபன் பிடிப்பட்டது குறித்து திருச்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பிறகு திருச்சி போலீசாரிடம் ஸ்டீபன் ஒப்படைக்கப்பட்டார்.

வங்கியில் திருடிய பணத்தை வைத்து கொண்டு என்ன செய்வது என தெரியாமல் ஊர் ஊராக சுற்றிய ஸ்டீபன் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க நடத்திய தீவிர சோதனையால் லாட்ஜில் தங்க இடம் கிடைக்காமல் ஆட்டோவிலேயே சுற்றி கடைசியில் போலீசில் சிக்கி கொண்டார்.
Tags:    

Similar News