செய்திகள்
மேட்டூரில் நேற்று மாலை பலத்த மழை கொட்டியது. மேட்டூர் 16 கண் பாலம் பகுதியில் மழை பெய்ததை படத்தில் காணலாம்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 17 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

Published On 2019-08-24 04:09 GMT   |   Update On 2019-08-24 04:09 GMT
மேட்டூர் அணைக்கு நேற்று காலை 15 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 17 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர்:

கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்தது.

இந்தநிலையில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்வதால் தமிழக காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நேற்று காலை 15 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 17 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றில் 10 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கால்வாயில் 600 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

நேற்று 116.93 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 117.2 அடியாக உயர்ந்தது. இதனால் மேட்டூர் அணை கடல் போல காட்சி அளிக்கிறது. மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்ட இன்னும் 3 அடிக்கும் குறைவாகவே தண்ணீர் தேவைப்படுவதால் இன்னும் ஒருவாரத்தில் மேட்டூர் அணை நிரம்ப வாய்ப்பு உள்ளது.

ஒகேனக்கல் காவிரியில் இன்று காலை 17 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது. அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் ஒகேனக்கல் அருவிகள் மற்றும் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக காவிரியில் மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் 24 மணி நேரமும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News