செய்திகள்
படுகாயம் அடைந்த பேராசிரியை சாந்திமேரி.

உடுமலை அரசு கல்லூரி பேராசிரியை மீது கொலைவெறி தாக்குதல்

Published On 2019-08-23 12:47 GMT   |   Update On 2019-08-23 12:47 GMT
உடுமலை அரசு கல்லூரி பேராசிரியை மீது மர்ம நபர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக் கல்லூரியில் புதுச்சேரியை சேர்ந்த சாந்திமேரி (42) என்பவர் சுற்றுலா துறை பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். தொடர் விடுமுறையை முன்னிட்டு நேற்று இரவு சாந்திமேரி புதுச்சேரிக்கு செல்வதற்காக உடுமலை பஸ் நிலையம் சென்றார்.

அவர் ராமசாமி நகர் அருகில் சென்றபோது மர்ம நபர்கள் சிலர் உருட்டு கட்டை, கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் பேராசிரியை சாந்திமேரியை தாக்கினர். இதில் நிலைகுலைந்த அவர் அலறி சத்தம் போட்டார். இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.

இதைபார்த்த மர்மநபர்கள் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பியோடி விட்டனர். இதையடுத்து படுகாயம் அடைந்த பேராசிரியை சாந்திமேரியை உடுமலை அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றி தெரியவந்ததும் உடுமலை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பேராசிரியை சாந்திமேரியிடம் விசாரணை நடத்தினர்.

நகை, பணத்துக்காக கொள்ளையடிக்கும் முயற்சியில் மர்மநபர்கள் பேராசிரியை மீது தாக்குதல் நடத்தினார்களா?

என்றும் அல்லது கல்லூரியில் நடந்த பிரச்சினையில் முன் விரோதம் காரணமாக யாராவது கூலிப்படையை ஏவி தாக்குதல் நடத்தினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News