செய்திகள்
அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

சிதம்பரம் கைது நடவடிக்கையில் உள்நோக்கம் ஏதும் இல்லை- ராஜேந்திர பாலாஜி பேட்டி

Published On 2019-08-23 11:15 GMT   |   Update On 2019-08-23 11:15 GMT
காஷ்மீர் பிரச்சினையை திசை திருப்பவே ப.சிதம்பரம் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறுவது தவறான குற்றச்சாட்டு என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.





விருதுநகர்:

விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காஷ்மீர் பிரச்சினையை திசை திருப்பவே ப.சிதம்பரம் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறுவது தவறான குற்றச்சாட்டு.

காஷ்மீர் பிரச்சினை என்பது நாட்டு நலன் கருதி மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை. ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளது நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் மறுத்ததை தொடர்ந்து, சட்டப்படி சி.பி.ஐ. அதிகாரிகள் எடுத்துள்ள நடவடிக்கை ஆகும். இதில் உள்நோக்கம் ஏதும் இல்லை. பொருளாதார குற்றத்துக்காக சி.பி.ஐ. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடந்த தேர்தலின்போது தேர்தல் முடிந்த பின்னர் அ.தி.மு.க. மந்திரிகள் சிறைக்கு போவார்கள் என்று கூறினார். ஆனால் இன்று அவர் தான் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றுள்ளார்.

ஜெயலலிதாவை போலீசார் கைது செய்ய வரும் போது அவர் ஒன்றும் கதவை மூடிவிடவில்லை. சாமி கும்பிட்டுவிட்டு போலீசாருடன் சென்றார். ஆனால் ப.சிதம்பரம் வீட்டிற்குள் போய் கதவை மூடிக்கொண்டார். அதனால் தான் சி.பி.ஐ. அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து அவரை கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

தி.மு.க.வினர் காஷ்மீர் பிரச்சினையை கண்டித்து டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். சுதந்திரத்துக்கு முன் வெள்ளையர்களுக்கு ஆதரவாக இங்கு சிலர் போராட்டம் நடத்தி கொண்டு இருந்தனர். அதேபோல் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் சில அன்னிய சக்திகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துகின்றனர்.

பிரதமர் மோடி தலைமையில் இந்தியா வலுவாக உள்ளது. காஷ்மீர் பிரச்சினையில் அவர் நல்ல முடிவு எடுத்துள்ளார். இந்தியாவை பார்த்து உலக நாடுகள் அதிசயிக்கின்றன. ராணுவ பலத்தை பார்த்து அண்டை நாடுகள் அச்சப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையில் இந்தியா வல்லரசாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நோய் தடுப்பு மற்றும் மருத்துவத்துறை, குடிநீர் வழங்கல் குறித்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் கலெக்டர் சிவஞானம், எம்.எல்.ஏ.க்கள் சாத்தூர் ராஜவர்மன், ஸ்ரீவில்லிபுத்தூர் சந்திரபிரபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News