செய்திகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நுழைவு வாயிலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில்- முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு

Published On 2019-08-23 07:00 GMT   |   Update On 2019-08-23 07:00 GMT
பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை அளித்த தகவலையடுத்து மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில், ரெயில், விமான நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
மதுரை:

இலங்கையில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 200-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக தமிழகத்தில் சில பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்த நிலையில் இலங்கை வெடிகுண்டு சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதிகள், தமிழகத்தில் ஊடுருவியிருப்பதாகவும், அவர்கள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும் உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

மதுரையில் மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட் சன் தேவாசீர்வாதம் உத்தரவின்பேரில் நகரின் முக்கிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக ஏற்கனவே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 4 நுழைவுவாயில்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

தற்போது உளவுத்துறை தகவல் காரணமாக கோவிலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. கோவிலுக்குள் அனைத்து பகுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். சித்திரை வீதிகளில் 5 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் மதுரை ரெயில் நிலையத்திலும் 100-க்கும் மேற்பட்ட ரெயில்வே போலீசார் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கிழக்கு, மேற்கு நுழைவு வாயிலில் பயணிகளின் உடமைகள் சோதனை செய்யப்பட்டு ரெயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய ரிசர்வ் படை போலீசார் விமான நிலைய பகுதிகளில் ரோந்து சுற்றி வருகின்றனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களான பெரியார், எம்.ஜி.ஆர் பஸ் நிலையங்கள், வணிக வளாகங்கள் உள்பட நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர். லாட்ஜுகளில் சோதனை நடத்தி அங்கு தங்கியிருந்தவர்களின் விபரங்களையும் போலீசார் சேகரித்தனர்.

Tags:    

Similar News