செய்திகள்
மறியலில் ஈடுபட்ட காங்கிரசார்.

ப.சிதம்பரம் கைதை கண்டித்து சென்னையில் காங்கிரசார் மறியல்

Published On 2019-08-22 09:19 GMT   |   Update On 2019-08-22 09:19 GMT
டெல்லியில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்ததை கண்டித்து சென்னையில் காங்கிரசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை:

டெல்லியில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்தனர்.

இதற்கு ராகுல்காந்தி, பிரியங்கா மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸ் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்தார்.

இதையடுத்து காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் முன்பு இன்று ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். போராட்டம் நடத்தினால் கைது செய்வதற்காக போலீஸ் வேன்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

காலை 10 மணி அளவில், காங்கிரஸ் தொண்டர்கள் சத்தியமூர்த்தி பவனுக்கு வர தொடங்கினார்கள். 11 மணி அளவில் சத்தியமூர்த்தி பவனில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு அண்ணா சாலையில் மறியல் செய்யப் போவதாக அறிவித்தனர்.

சத்தியமூர்த்திபவனில் இருந்து வெளியே வந்து போராட்டம் நடத்தினால் கைது செய்வோம் என்று போலீசார் எச்சரித்தனர். சத்தியமூர்த்தி பவன் வாசலில் தடுப்பு வேலிகள் வைக்கப்பட்டன.

என்றாலும் முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் குமரிஅனந்தன், கிருஷ்ணசாமி ஆகியோர் தலைமையில் காங்கிரசார் ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது, “கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம். மோடியை கண்டிக்கிறோம். போடாதே போடாதே பொய் வழக்கு போடாதே... விடுதலை செய்... விடுதலை செய்... நிபந்தனையின்றி சிதம்பரத்தை விடுதலை செய்...” என்று கோ‌ஷம் எழுப்பினார்கள்.

சத்தியமூர்த்தி பவனில் இருந்து வெளியேறி திரு.வி.க. சாலையில் வர முயன்றதும் போலீசார் தடுத்தனர். அதை மீறி சிலர் ரோட்டில் அமர்ந்து மறியல் செய்தனர். அவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினர்.

இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போலீசாருக்கும், சில காங்கிரசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மறியல் போராட்டத்தின் போது காங்கிரஸ் நிர்வாகிகள் கோபண்ணா, ராயபுரம் மனோ, ரங்கபாசியம், உ.பலராமன், செல்வம், தணிகாசலம், மாவட்ட தலைவர்கள் சிவராஜசேகர், வீரபாண்டியன் மற்றும் சுகுமார்தாஸ், ஜி.கே.தாஸ், அகரம் கோபி, சூளை சுரேஷ் பாபு, விருகை ராமச்சந்திரன், திருவான்மியூர் மனோகரன், எஸ்.கே.நவாஸ், சூளை ராஜேந்திரன், தமிழ் செல்வன், விஜய், கடல் தமிழ்வாணன், எழும்பூர் தினேஷ், அப்துல் ரகுமான் உள்பட 150 பேர் கைதானார்கள்.

அனைவரும் ராயப்பேட்டை சமுதாய நல கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தின் காரணமாக சத்தியமூர்த்தி பவன் முன்பு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Tags:    

Similar News