செய்திகள்
நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசிய காட்சி.

மக்களின் கோரிக்கை அடிப்படையில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும்- அமைச்சர் பேட்டி

Published On 2019-08-21 12:37 GMT   |   Update On 2019-08-21 12:37 GMT
மக்களின் கோரிக்கைகளை ஏற்று, அரசின் கொள்கை முடிவின் அடிப்படையில் புதிய மாவட்டங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

திருச்சி:

திருச்சி இந்திய மேலாண்மை கழகத்துடன், தமிழக அரசின் இ-சேவை மையம், தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான ஒப்பந்தம் செய்துள்ளது. அதன் தொடக்க விழா திருச்சி இந்திய மேலாண்மை கழகத்தில் இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் இ-சேவை மையத்தின் வளர்ச்சிக்காக தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டு பயிற்சி மையத்தை தொடங்கி வைத்த தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த ஒப்பந்தம் தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான ஒரு மைல்கல்லாக அமையும். இதன் மூலம் இ-சேவை மையங்களில் பொது நிர்வாகம், வருவாய், சமூக பாதுகாப்பு நலத்திட்டங்கள் மற்றும் சேவைகளை துரிதப்படுத்தவும், மக்களுக்கு சேவைகளை விரைந்து வழங்கவும் முடியும்.

வருவாய்த்துறையுடன் தகவல் தொழில்நுட்பம் இணையும் போது மேலும் பல வளர்ச்சிகளை தமிழகம் அடையும். இ-சேவை மையங்களில் ஏற்பட்டுள்ள குறைகளை களைவதற்கான திட்டம் தான் இந்த ஒப்பந்தம்.

நிர்வாகம், மக்கள் தொகை, பூலோக அடிப்படையில், மக்களின் கோரிக்கைகளை ஏற்று, அரசின் கொள்கை முடிவின் அடிப்படையில் புதிய மாவட்டங்கள் அமைக்கப்படும். தற்போது தமிழகத்தில் 85 புதிய வட்டங்கள், 11 புதிய கோட்டங்கள், 5 புதிய மாவட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்றார்.

முன்னதாக கருத்தரங்கில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது:-

எந்த பிரச்சினைக்கும் தீர்வு வேண்டும். அந்த வகையில் 7 கோடி மக்களின் வாழ்க்கை வளர்ச்சிக்கு இந்த கருத்தரங்கு மூலம் தொழில் நுட்ப உதவி ஏற்படும். வருங்காலங்களில் உணவு, உடை, இருப்பிடத்துடன் இன்டர்நெட் வசதியும் வேண்டும். அது இல்லை என்றால் கண்ணிருந்தும் குருடர்கள் போல தான். எனவே இன்டர்நெட் இல்லை எனில் நவீன சமுதாயத்திற்குள் வர முடியாது என்றார்.

Tags:    

Similar News