செய்திகள்
ஓடை வெள்ளத்தை கயிறு கட்டி ஆபத்தான முறையில் கடந்த மக்கள்

கொடைக்கானலில் இடைவிடாத மழை - கயிறு கட்டி ஊரை கடந்த கிராம மக்கள்

Published On 2019-08-21 07:47 GMT   |   Update On 2019-08-21 07:47 GMT
கொடைக்கானலில் இடைவிடாது பெய்து வரும் கன மழையால் ஓடையில் நீர்வரத்து அதிகரித்து கயிறு கட்டி கிராம மக்கள் பாதையை கடந்து வருகின்றனர்.
கொடைக்கானல்:

கொடைக்கானலில் கடந்த 3 நாட்களாகவே விட்டு விட்டு கன மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்கை முடங்கி உள்ளது. பிரகாசபுரம், பெருமாள் மலை, பேத்துப்பாறை, வெள்ளைப்பாறை, நாயுடுபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை 1 மணி நேரத்துக்கு மேலாக பலத்த மழை பெய்தது.

இந்த மழையினால் வெள்ளி நீர்வீழ்ச்சி, பியர்சோழா அருவி, வட்டக்காணல், பாம்பார் அருவி, புலியோடை அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

கொடைக்கானல் புறநகர் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. தற்போது பெய்த மழையால் அட்டக்கடி, குறிஞ்சிநகர், வில்பட்டி, பள்ளங்கி ஆகிய பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நீங்க உள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கன மழையால் வத்தலக்குண்டு-பழனி மலைச்சாலையில் ஆங்காங்கே கற்கள் சிதறி கிடந்தன. இதனால் வாகனங்கள் செல்வதில் இடையூறு ஏற்பட்டது. பேத்துப்பாறை பகுதியில் உள்ள நீரோடையில் அளவுக்கு அதிகமான தண்ணீர் சென்றது. இதனால் அப்பகுதி மக்கள் கயிறு மூலம் நீரோடையை ஆபத்தான முறையில் கடந்து சென்றனர்.

ஒவ்வொரு முறையும் பலத்த மழை பெய்யும் சமயங்களில் இதுபோன்ற சிரமத்திற்கு அப்பகுதி மக்கள் ஆளாகி வருகின்றனர். ஏற்கனவே இப்பகுதியில் பொதுமக்கள் தாங்களாகவே சாலையை கடக்க மரப்பாலம் அமைத்திருந்தனர். ஆனால் கஜா புயலின்போது அந்த பாலம் முற்றிலும் சேதம் அடைந்தது. எனவே இங்கு தடுப்பணையுடன் கூடிய பாலம் அமைத்து கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மழை தொடர்ந்து பெய்து வருவதால் பள்ளி மாணவ-மாணவிகளும், கூலித்தொழிலாளர்களும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

நிலக்கோட்டை பகுதியில் உள்ள குளத்துப்பட்டி, ஊத்துப்பட்டி, கட்ட கூத்தம்பட்டி, சிலுக்குவார் பட்டி, கோடாங்கிநாயக்கன்பட்டி, அணைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு மேலாக மழை இல்லாமல் இருந்தது. கடந்த சில மாதங்களாகவே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு வகையில் பாதிப்புக்குள்ளாகி வந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை திடீரென்று கார் மேகங்களுடன், பலத்த காற்று வீசியும், பின்னர் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை சுமார் 2 மணி நேரம் கனமழையாக பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.




Tags:    

Similar News