செய்திகள்
மேட்டூர் அணை

நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியாக சரிவு - மேட்டூர் அணை நிரம்புவதில் தாமதம்

Published On 2019-08-21 04:42 GMT   |   Update On 2019-08-21 04:42 GMT
மேட்டூர் அணைக்கு நேற்று 27 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 20 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.


மேட்டூர் அணைக்கு நேற்று 27 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 20 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.


மேட்டூர்:

கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து நீர்திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

கடந்த 12-ந் தேதி 2 அணைகளில் இருந்தும் 3 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் தற்போது வெறும் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே 2 அணைகளில் இருந்தும் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தமிழக காவிரியில் தண்ணீர் வரத்து நாளுக்கு நாள் சரிந்து வருகிறது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் நேற்று நீர்வரத்து 26 ஆயிரம் கன அடியாக குறைந்தது. ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து குறைந்துள்ளதால் தண்ணீல் மூழ்கி இருந்த அருவிகள் தற்போது வெளியில் தெரிகிறது.

ஆனாலும் அருவிகள் மற்றும் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 14-வது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரியில் கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சேதம் அடைந்த பகுதிகள் தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது.

ஒகேனக்கலில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று 27 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 20 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு காவிரி ஆற்றில் 10 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 500 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று காலை 115.82 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 116.39 அடியானது.

கடந்த வாரம் மேட்டூர் அணைக்கு 2 லட்சம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வந்ததால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. தற்போது தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் அணை நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து வருகிறது. இதனால் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்ட இன்னும் ஒரு வாரத்திற்கும் மேல் ஆகும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News