செய்திகள்
ரெயிலில் சிக்கிய மொபட்

கொருக்குப்பேட்டையில் மொபட் மீது ரெயில் மோதியது: தாய்-மகள்கள் உயிர் தப்பினர்

Published On 2019-08-20 11:53 GMT   |   Update On 2019-08-20 12:13 GMT
கொருக்குப்பேட்டையில் ரெயில் விபத்தில் இருந்து தாய் - மகள்கள் உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ராயபுரம்:

கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் சுமதி. இவர் இன்று காலை தனது 2 மகளை மொபட்டில் பள்ளிக்கு அழைத்துக் கொண்டு சென்றார்.

சுமதி கொருக்குப்பேட்டை ரெயில் நிலையம் அருகே சென்றபோது ரெயில் வருகைக்காக ரெயில்வே கேட் மூடப்பட்டு இருந்தது. அப்போது சிலர் மோட்டார் சைக்கிளை தள்ளி சென்று ரெயில்வே கேட்டில் குனிந்தபடி சென்று கொண்டிருந்தனர்.

இதை பார்த்த சுமதியும் மொபட்டை தள்ளி கொண்டு ரெயில்வே கேட்டை கடந்து சென்றார். அப்போது ஆந்திராவின் சூலூர்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு மின்சார விரைவு ரெயில் வந்து கொண்டு இருந்தது.

அந்த நேரத்தில் சுமதி, 2 குழந்தைகளும் மொபட்டுடன் தண்டவாளத்தின் நடுபகுதியில் நின்று கொண்டு இருந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கூச்சல் போட்டனர்.

உடனே சுமதி மொபட்டை தண்டவாளத்திலேயே விட்டு விட்டு தனது 2 மகள்களை தூக்கிக் கொண்டு அங்கிருந்து ஓடி வந்து விட்டார். வேகமாக வந்த மின்சார ரெயில் மொபட் மீது மோதி சிறிது தூரம் இழுத்து சென்றது. இதில் மொபட் சுக்குநூறாக உடைந்தது.

ரெயிலுக்கு அடியில் மொபட் சிக்கி கொண்டதால் ரெயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. ரெயில் வருவதை பார்த்து சுமதி உடனே அங்கிருந்து ஓடி சென்றதால் குழந்தைகளுடன் உயிர் தப்பினார்.

இதுகுறித்து தகவல் அறிந்து ரெயில்வே போலீசார், ஊழியர்கள் அங்கு வந்தனர். ரெயிலுக்கு அடியில் சிக்கி இருந்த மொபட்டை வெளியே எடுத்தனர்.

பின்னர் மின்சார ரெயில் 40 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இந்த விபத்தால் அந்த வழித் தடத்தில் ரெயில்கள் சேவையில் தாமதம் ஏற்பட்டது.

ரெயில்வே கேட் மூடப்பட்டு இருந்தாலும் சில வாகன ஓட்டிகள் அதைப் பொருட்படுத்தாமல் தண்ட வாளத்தை கடக்கும் சம்பவங்கள் சென்னையில் அடிக்கடி நடந்து வருகிறது.

தண்டவாளங்களை கடக்க வேண்டாம் என்று ரெயில்வே போலீசார் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும் அதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News