செய்திகள்
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

அ.தி.மு.க.வில் மட்டுமே அடிமட்ட தொண்டன் கூட பதவிக்கு வர முடியும்- அமைச்சர் சீனிவாசன் பேச்சு

Published On 2019-08-19 10:29 GMT   |   Update On 2019-08-19 10:29 GMT
அ.தி.மு.க.வில் மட்டுமே அடிமட்ட தொண்டன் கூட பதவிக்கு வரும் நிலை உள்ளது என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக மருதராஜ், துணைத் தலைவராக கண்ணன் ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கினார். அதன் பின் அவர் பேசுகையில், தற்போது பதவியேற்றுள்ள தலைவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை.

கடந்த பல ஆண்டுகளாக திண்டுக்கல் மாவட்டத்தில் கட்சி பணி மற்றும் மக்கள் பணியாற்றியுள்ளனர். பதவி என்பது யாருக்கும் நிரந்தரம் இல்லை. அ.தி.மு.க.வில் மட்டுமே அடிமட்ட தொண்டன் கூட உயர்ந்த நிலைக்கு வரும் நிலை உள்ளது.

அதன்படி கடுமையாக உழைத்தால் பதவி உங்களை தேடி வரும். எதிர்கட்சியினர் தற்போது அ.தி.மு.க. மேற்கொண்டு வரும் குடி மாரமத்து பணிகளை குறை கூறி வருகின்றனர். ஆனால் இது மிகவும் அருமையான தமிழகத்தின் முன்னோடியான திட்டம் ஆகும். வறட்சியின் பிடியில் உள்ள மக்கள் குடி மராமத்து திட்டத்தினால் நீர் நிலைகளில் தண்ணீர் தேக்கி பயனடைந்து வருகின்றனர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் பரமசிவம், தேன்மொழி, முன்னாள் எம்.பி. உதயகுமார், கொடைக்கானல் மேல்மலை ஒன்றிய பேரவை செயலாளர் சிவாஜி, ஆவின் தலைவர் செல்லசாமி, அபிராமி கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் பாரதிமுருகன், ஆத்தூர் ஒன்றிய செயலாளர் நடராஜன், ஒட்டன்சத்திரம் பாலசுப்பிரமணி, நத்தம் ஷாஜகான், சாணார்பட்டி ராமராசு, நகர கூட்டுறவு வங்கி தலைவர் பிரேம், செட்டிநாயக்கன்பட்டி கூட்டுறவு சங்க துணைத் தலைவர் ராஜ்மோகன், திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாக இயக்குனர் உமா மகேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News