செய்திகள்
வைகை அணை

தேனி மாவட்டத்தில் கனமழை - வைகை அணை நீர்மட்டம் கிடுகிடு உயர்வு

Published On 2019-08-19 04:22 GMT   |   Update On 2019-08-19 04:22 GMT
தேனி மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக வைகை அணை நீர் மட்டம் 46 அடியை எட்டியுள்ளது.
கூடலூர்:

தாமதமாக தொடங்கிய தென்மேற்கு பருவ மழை கேரளாவிலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்திலும் தீவிரமடைந்துள்ளது. இதனால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது.

அணையின் நீர் மட்டம் அதிகரித்ததால் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வைகை அணையில் சேமிக்கப்பட்டு வருகிறது. மேலும் வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியிலும் தேனி மாவட்டத்திலும் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 130.70 அடியாக உள்ளது. அணைக்கு 1150 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1700 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4861 மில்லியன் கன அடியாக உள்ளது.

71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் 45.96 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1592 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்கு 60 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 1507 மில்லியன் கன அடியாக உள்ளது.

மஞ்சளாறு அணை நீர் மட்டம் 35 அடியாகவும், சோத்துப்பாறை அணை நீர் மட்டம் 81.18 அடியாகவும் உள்ளது. தொடர்ந்து இன்று காலையிலும் பல இடங்களில் சாரல் மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பெரியாறு 6.2, தேக்கடி 5.2, கூடலூர் 8, சண்முகாநதி அணை 4, உத்தமபாளையம் 5.4, வீரபாண்டி 6, வைகை அணை 66, மஞ்சளாறு 31, சோத்துப்பாறை 12, கொடைக்கானல் 8.6 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

Tags:    

Similar News